பொள்ளாச்சியில் மீண்டும் கொடூரம்: 14 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 6 பேர் கைது!
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை போல, மீண்டும் மற்றொரு சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த ஆறு மாதம் முன்பு 14 வயது சிறுமியை, 17 வயது வாலிபர் ஒருவர் காதலிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் திருமணம் செய்து கொள்வதாக கூறி அச்சிறுமியை, அந்த வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அந்த வாலிபர் தன் நண்பர்களிடம் சிறுமியுடன் பழகி வருவதை கூறியுள்ளார். இதையடுத்து மகரஜோதி, நாகராஜ், முத்து முருகன், பிரவீன் மற்றும் 16 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறார்கள் என ஆறு பேர் சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். மேலும் பாலியல் வன்கொடுமை செய்ததை யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளனர். இதனால் அந்த சிறுமி தனக்கு நேர்ந்த துயரத்தை யாரிடமும் சொல்லாமல் மறைத்துள்ளார்.
இந்நிலையில் சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமியின் தாயார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்துள்ளார். இதில் சிறுமி 5 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில் விசாரித்த காவல் துறையினர் 6 பேரும் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததை உறுதி செய்தனர். இதையடுத்து 6 பேர் மீது காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 18 வயதிற்கும் கீழ் உள்ள இரண்டு சிறார்களையும் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் சேர்த்தனர்.
இதுகுறித்து பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் தமிழ்மணி கூறுகையில், ”கடந்த ஏழு மாதங்களில் போக்சோ சட்டத்தில் பொள்ளாச்சியில் 15 வழக்குகளும், வால்பாறையில் 4 வழக்குகளும் என மொத்தம் 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பெற்றோர்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். குழந்தைகள் வீட்டில் தனியாக இருக்கும் பொழுது பெற்றோர்கள் குழந்தைகளிடம் நண்பர்களாக அணுகி அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து சரி செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் , பெண்கள் எங்கேயும் எப்போதும் அவசர உதவிக்கு 181 என்ற எண்ணை அழைக்கலாம் எனவும், குழந்தைகள் தொடர்பான பிரச்சினைக்கு 1098 அழைக்கலாம் எனவும், பெண்களுக்கு மன ரீதியாக, உடல் ரீதியாக மற்றும் பாலியல் சம்மந்தமாக ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் தயங்காமல் கோவை மாவட்ட காவல் துறையை தொடர்பு கொள்ள 7708100100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய பெண்களை காதலிப்பதாக கூறி நண்பர்களுடன் இணைந்து பாலியல் வன்கொடுமை செய்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை போல, மீண்டும் மற்றொரு சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.