கோவை: வலிமைக்காக காத்திருந்த ரசிகர்கள்... திரையரங்கம் முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு..!
அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு ஒன்றை வீசி விட்டு தப்பிச் சென்றனர். இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்ட பகுதியில் விழுந்த அந்த குண்டு காரணமாக இரு சக்கர வாகனம் ஒன்று லேசான சேதம் அடைந்தது.
கோவையில் அஜித்குமார் நடித்த திரைப்படமான வலிமை வெளியான திரையரங்கின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் அஜித் நடிப்பில், இயக்குனர் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் இன்று அதிகாலை கோவையில் திரையரங்குகளில் வெளியானது. நீண்ட காலமாக இப்படத்தை காண அஜித் ரசிகர்கள் காத்திருந்த நிலையில், இன்று வலிமை திரையரங்களில் வெளியானது. இதையொட்டி நள்ளிரவு முதலே திரையரங்குகள் முன்பு திரண்ட அஜித் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், உற்சாக நடனமாடியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் டிக்கெட் கிடைக்காததால் ரசிகர்கள் திரையரங்கம் முன்பு திரண்டு காத்திருந்தனர். இதனால் அந்த பகுதிகளில் பரபரப்பான சூழல் நிலவியதால் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள அர்ச்சனா திரையரங்கில் காலை 5 மணிக்கு காட்சி துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 4.30 மணி வரை ரசிகர்களை திரையரங்குக்கு அனுமதிக்காததால் ரசிகர்கள் அங்கிருந்த இரும்பு கேட்டின் மீது ஏறி எட்டி குதித்து திரையரங்கிற்குள் நுழைந்தனர். இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் அங்கிருந்த ரசிகர்களை அப்புறப்படுத்தினர்.
இதையடுத்து 5 மணிக்கு காட்சி துவங்கியதும் ஏற்கனவே டிக்கெட் எடுத்து இருந்த ரசிகர்கள் மட்டும் திரையரங்கிற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் கோவை நூறடி சாலையில் உள்ள கங்கா திரையரங்கம் முன்பு ரசிகர்கள் திரண்டு இருந்த போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு ஒன்றை வீசி விட்டு தப்பிச் சென்றனர். இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்ட பகுதியில் விழுந்த அந்த குண்டு காரணமாக இரு சக்கர வாகனம் ஒன்று லேசான சேதம் அடைந்தது. உடனடியாக அங்கிருந்த ரசிகர்கள் அந்த வாகனத்தை தள்ளி நிறுத்தியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் உடனடியாக அங்கிருந்த ரசிகர்களை அப்புறப்படுத்தி விட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இந்த குண்டு வீச்சு சம்பவத்தில் ரசிகர்கள் சிலருக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுவது குறித்தும் காவல துறையினர் விசாரிக்கின்றனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை அறிய :ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்