Watch Video: கிச்சன் சுவரை உடைத்து உணவுப்பொருட்களை எடுத்து சாப்பிடும் காட்டு யானை - வைரலாகும் வீடியோ..!
வீட்டிற்கு வெளியேயும், சமையலறையிலும் பொருத்தப்பட்டிருந்த சமையலறை சுவரை உடைத்து உணவுப் பொருட்களை காட்டு யானை எடுத்து சாப்பிடும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் காட்டு யானை சமையலறை சுவரை உடைத்து உள்ளே இருந்த உணவுப் பொருட்களை தேடித்தேடி எடுத்து சாப்பிடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம் மலை மாவட்டமாக உள்ளது. இம்மாவட்டம் உயிர்க்கோள காப்பகங்களில் ஒன்றாக உள்ளது. அதேபோல இம்மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகள் வனவிலங்குகள் உள்ளிட்ட பல்லுயிர்களின் புகலிடமாகவும் விளங்கி வருகிறது. குறிப்பாக கூடலூர் அருகேயுள்ள முதுமலை புலிகள் காப்பக பகுதிகளில் புலிகள், காட்டு யானைகள், மான்கள், கரடிகள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் இப்பகுதியில் உள்ள காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை ஓட்டியுள்ள கிராமங்களுக்குள் செல்வது வழக்கம். சில சமயங்களில் காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் சென்று உணவுப் பொருட்களை எடுத்து சாப்பிடுவதும் நடந்து வருகிறது.
கூடலூரை அடுத்துள்ள மசினகுடி பகுதியில் வசிப்பவர் ஷாம் நரேன். இவர் தனது குடும்பத்தாருடன் வீட்டில் வசித்து வருகிறார். இவரது வீட்டை சுற்றி பாதுகாப்பிற்காக சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் அப்பகுதியில் நேற்று அதிகாலை ஒற்றை ஆண் காட்டு யானை ஒன்று உலா வந்துள்ளது. அப்போது ஷாம் நரேன் மற்றும் அவரது குடும்பத்தினர் படுக்கை அறையில் இருந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் வீட்டின் சமையலறை சுவரை உடைத்து உணவுப் பொருட்களை எடுத்து சாப்பிடும் காட்டு யானை@abpnadu pic.twitter.com/30XaRsPI6r
— Prasanth V (@PrasanthV_93) June 27, 2022">
வீட்டிற்குள் உணவுப் பொருட்கள் இருந்த சமையலறையை மோப்பம் பிடித்த அந்த காட்டு யானை, அந்த அறைக்கு முன்பாக சென்றுள்ளது. அப்போது ஜன்னலை உடைத்து தும்பிக்கையை சமையலறைக்குள் விட்டு உணவுப் பொருட்களை தேடி உள்ளது. உணவுப் பொருட்கள் தும்பிக்கைக்கு அகப்படாததால், சுவரை உடைத்து உடலை உள்ளே நுழைந்து உணவுப் பொருட்கள் இருந்த ஒரு மூட்டையை தூக்கி வெளியே எடுத்துள்ளது. பின்னர் அந்த மூட்டையில் இருந்த உணவுப் பொருளை சாப்பிட்டபடி, அங்கிருந்து சென்றுள்ளது. இதனிடையே சத்தம் கேட்டு ஷாம் நரேன் சிசிடிவி காட்சிகளை பார்த்த போது, காட்டு யானை இருப்பதை பார்த்து அச்சம் அடைந்தார்.
இதுகுறித்து வனத்துறையினருக்கு அவர் தகவல் அளித்தார். இந்நிலையில் வீட்டிற்கு வெளியேயும், சமையலறையிலும் பொருத்தப்பட்டிருந்த சமையலறை சுவரை உடைத்து உணவுப் பொருட்களை காட்டு யானை எடுத்து சாப்பிடும் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதேசமயம் காட்டு யானையின் இந்தச் செயல் அப்பகுதி மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்