NET தேர்வு.. வெள்ளி அரைஞாண் கயிற்றை கழட்ட மறுத்த தேர்வர்.. இடுப்பில் டேப் ஒட்டிய கல்லூரி நிர்வாகம்
விதிமுறைகளில் இல்லாத ஒன்றை செய்ய முடியாது என கூறி அவர் கழட்ட மறுத்ததால், விரிவுரையாளர் அணிந்து இருந்த வெள்ளி அரைஞாண் கயிற்று மேல் டேப் ஓட்டிய பின்பே கல்லூரி நிர்வாகம் தேர்விற்கு அனுப்பியுள்ளனர்.
கோவையில் NET தேர்விற்கு வந்த நபருக்கு வெள்ளி அரைஞாண் கயிற்றை கழட்ட மறுத்ததால், அவரது இடுப்பில் டேப் ஒட்டப்பட்டு தேர்விற்கு அனுப்பப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் உள்ள ரங்கநாதன் பொறியியல் கல்லூரியில் NET தேர்வு நடைபெற்று வருகிறது. UGC சார்பில் நடத்தப்படும் இந்த NET தேர்வில் முதுகலை படித்து முடித்த மாணவர்களும், கல்லூரி விரிவுரையாளர்களும் பங்கேற்று தேர்வு எழுதி வருகின்றனர். தேர்விற்கு வரும் மாணவ, மாணவியர் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்களிடம், நீட் தேர்விற்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை போல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக கூறப்படுகின்றது.
குறிப்பாக பெண்கள் கம்மல், செயின், மோதிரம், கொலுசு, தாலி, மெட்டி, தலைக்கு கிளிப் போன்றவை அணிந்து செல்ல கூடாது எனவும், ஆண்கள் வெள்ளி அரைஞாண் கயிறு உட்பட எந்த விதமான மெட்டல் பொருட்களும் கொண்டு செல்லக்கூடாது அறிவுறுத்தப்படுவதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் NET தேர்விற்கு வந்த கல்லூரி விரிவுரையாளர் ஒருவரை வெள்ளி அரைஞாண் கயிற்றை கழட்டுமாறு கல்லூரி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். ஆனால் UGC விதிமுறைகளில் இல்லாத ஒன்றை செய்ய முடியாது என கூறி அவர் கழட்ட மறுத்துள்ளார்.
இதனையடுத்து கல்லூரி விரிவுரையாளர் அணிந்து இருந்த வெள்ளி அரைஞாண் கயிறு மேல் டேப் ஓட்டிய பின்பே கல்லூரி நிர்வாகம் தேர்விற்கு அனுப்பியுள்ளனர். இதேபோன்று தேர்வுக்கு வந்த மாணவியர் பலரும் தலைவிரி கோலமாய் அணிகலன்கள் அணியாமல் எழுதியதாக தேர்வில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர். இன்றும் அந்த கல்லூரியில் NET தேர்வானது நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வு மையத்தில் தொடர்ந்து வகுக்கப்படாத விதிகள் கடைபிடிக்கப்படுதால் பிரச்சனைகள் ஏற்படுவதாகவும், அடிப்படை வசதிகள் கூட இந்த தேர்வு மையத்தில் செய்து தருவதில்லை எனவும் கூறிய தேர்வில் பங்கேற்றவர்கள், இது குறித்து யுஜிசி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.