’சர்வதேச விண்வெளி மையம் போட்டி உருவாகாத இடமாக இருக்க வேண்டும்' - மயில்சாமி அண்ணாதுரை பேட்டி
"சர்வதேச விண்வெளி மையத்தில் போட்டி என்பது கூடாது. அனைத்து நாடுகளும் ஒன்று சேர்ந்து சர்வதேச விண்வெளி மையத்தில் இயங்க வேண்டும். இந்தியா வழி நடத்த வேண்டும்."
கோவையில் தனியார் பல் மருத்துவமனை திறப்பு விழாவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”சுதந்திரத்திற்கு பின்பு முப்பதாக இருந்த மனிதர்களின் ஆயுட்காலம் 72 ஆக அதிகரித்து இருக்கின்றது. இதயம் எப்படி முக்கியமோ, அதுபோல பல் முக்கியம். இருதய அறுவை சிகிச்சை எப்படி பல மாற்றங்களை தாண்டி இருக்கின்றதோ, அது போல பல்லின் சிகிச்சையும் பல மாற்றங்களை சந்தித்து இருக்கின்றது. விக்ரம் லேன்டரின் ஆயுட்காலம் 14 நாட்கள் மட்டுமே. அதற்கான ஆயுட் காலம் நிறைவு பெற்றது. பிரஞ்யான் அலைவரிசை, விக்ரம் அலைவரிசை இரண்டும் இணைந்தால் தான் தகவல் கிடைக்கும். இப்போது பிரஞ்யான் உயிரோடு இருந்தாலும் செய்தி பரிமாற்றம் இருக்காது. சந்திராயன் 3 பணி நிறைவடைந்து இருப்பதாகவே நான் பார்க்கின்றேன்.
சந்திரனில் விண்கற்கள் விழுவது என்பது சகஜம். பூமியிலும் விண்கற்கள் விழுகின்றன. இங்கு வாயு இருப்பதால் எரிந்து விடுகின்றன. ஆனால் நிலவில் அவ்வாறு இல்லாததால் விழுகலாம். அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. ககன்யான் திட்டம் அதிகபட்ச முன்னெச்சரிக்கையாக செய்யப்பட்டுள்ளது. இது சிறு அங்கம் தான். ககன்யான் கடைசி நொடியில் நிறுத்தப்பட்டு, அடுத்த அரை மணி நேரத்தில் மீண்டும் செலுத்தப்பட்டது. இது இந்திய விண்வெளி துறையில் சிறப்பானதாக இருக்கும். இதில் பல கட்டங்களை தாண்ட வேண்டும். இது முதல் கட்டம் மட்டும் தான்.
குலசேகரபட்டினம் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த வேண்டும். ஏவுதளம் அமைப்பதை தாண்டி, எரிபொருள் தயாரிப்பது உட்பட திட்டங்களை கொண்டு செயல்பட அது சிக்கனமாக ஏவுதளமாக அமையும். சிறிய ரக செயற்கைக்கோள்கள் தான் இப்போது அனுப்பப்படுகின்றது. தினமும் ஒன்று இரண்டு செயற்கைகோள்கள் அனுப்பும் நிலை வரலாம். அப்போது சிறப்பான இடமாக குலசேகரபட்டினம் ஏவுதளம் இருக்கும். அதற்கான கட்டமைப்புகள் வரும் போது பலன் அளிக்கும்.
தமிழக அளவில் விஞ்ஞானிகளுக்கு அரசு சார்பில் உரிய அங்கீகாரம் அளிக்கப்படுவது உந்துசக்தயாக இருக்கும். சர்வதேச விண்வெளி மையத்தில் போட்டி என்பது கூடாது. அனைத்து நாடுகளும் ஒன்று சேர்ந்து சர்வதேச விண்வெளி மையத்தில் இயங்க வேண்டும். இந்தியா வழி நடத்த வேண்டும். அப்போதுதான் பிரச்சினைகள் வராது. சர்வதேச விண்வெளி மையம் போட்டி உருவாக கூடாத இடமாக இருக்க வேண்டும். விண்வெளி துறையில் இந்தியாவின் முன்னெடுப்புகள் வர்த்தக ரீதியாக பல நாடுகள் இந்தியாவை நோக்கி வரவழைக்கும்.
நிலவில் மனிதர்களை அனுப்ப அமெரிக்க முயற்சி எடுத்து வருகின்றது. சில வருடங்களில் அது நடக்கும். இந்தியா நிலவிற்கு மனிதர்களை அனுப்ப இன்னும் 10 ஆண்டுகள் ஆகும். ஆயுட் காலம் நிறைவடைந்த பின்பு விண்கலங்களை திரும்ப கொண்டு வருவது குறித்து இப்போதே ஆலோசிக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.