கோவையில் திமுக பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் காலை முதல் 100 க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
கோவையில் திமுக இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநிலத் துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் கல்லூரிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, திருவண்ணாமலையில் இருக்கும் அமைச்சருக்கு சொந்தமான இடங்களில் இந்த சோதனை நடத்தி வருகின்றனர். காலை 6 மணி முதல் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் காலை முதல் 100 க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலையில் அமைச்சர் எ.வ.வேலுக்கு சொந்தமான வீடு கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறையினை அதிரடியாக சோதனையிட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவையிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை ராமநாதபுரம்- நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மூன்று கார்களில் வந்துள்ள அதிகாரிகள் தற்போது சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு காவல் துறையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல அதேபகுதியில் பார்சன் என்ற அபார்ட்மெண்ட்டில் உள்ள மீனா ஜெயக்குமாரின் மகன் ஸ்ரீ ராமின் வீடு மற்றும் சிங்காநல்லூர் பகுதியில் திமுக பிரமுகரும், முன்னாள் கவுன்சிலருமான எஸ்.எம்.சாமி ஆகியோரின் வீடுகளிலும் இந்த சோதனை நடந்து வருகிறது.
மீனா ஜெயக்குமார் அமைச்சர் எ.வ.வேலுவின் உறவினர் என்ற முறையில் இந்த வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது. இவரது கணவர் ஜெயக்குமார் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளர் என கூறப்பட்ட மீனா ஜெயக்குமாருக்கு, உட்கட்சி பூசலால் தேர்தலில் போட்டியிட கூட வாய்ப்பு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. திமுக பிரமுகர்கள் வீடுகளில் அடுத்தடுத்து நடந்து வரும் வருமான வரித்துறை சோதனைகள் அக்கட்சியினரிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.