காஷ்மீராக மாறிய ஊட்டி: உறைய வைக்கும் உறைபனியால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
உதகையில் இன்று காலை குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. உறைபனியால் புல்வெளிகள் வெள்ளை நிற கம்பளம் போல ரம்மியமாக காட்சி அளித்தன
நீலகிரி மாவட்டம் உதகையில் இன்று காலை குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி உள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை குளிர்காலம் நீடிக்கும். இக்காலங்களில் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படும். மேலும் உறை பனி பொழிவும் இருக்கும். டிசம்பர் மாதத்தின் இறுதி நாட்களில் குறைந்தபட்ச வெப்ப நிலையின் அளவு பூஜ்யம் டிகிரிக்கு செல்லக்கூடும். சில நாட்களில் பூஜ்ஜியத்துக்கும் கீழ் பெப்பநிலை இறங்கும். உறைபனியின் தாக்கத்தால் புல்வெளிகள், தேயிலை, மலைக் காய்கறி பயிர்கள் ஆகியவை கருகிவிடும்.
இந்நிலையில் நீலகிரியில் இந்தாண்டு தொடர் மழை காரணமாக பனிப்பொழிவு தாமதமாக துவங்கியுள்ளது. இதனால் உதகை பகுதியில் இரவில் கடுங்குளிர் நிலவுகிறது. குறிப்பாக கடந்த வாரம் முழுவதும் நீர் பனியின் தாக்கம் காணப்பட்டு வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக உதகை நகரில் மத்திய பேருந்து நிலையம், தாவரவியல் பூங்கா, படகு இல்லம், காந்தல், தலைகுந்தா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நீர் நிலைகள், புல்வெளிகள், புற்கள், மரங்கள் உள்ளிட்டவை மீது உறைபனி படர்ந்துள்ளது. சாலையோரம் நின்ற வாகனங்கள் மீதும் பனி படிந்திருந்தது. உதகை சுற்றுவட்டார பகுதிகளில் நிலவும் உறைபனியால் புல்வெளிகள் வெள்ளை நிற கம்பளம் போல ரம்மியமாக காட்சி அளித்தன.
இன்று காலை குறைந்தபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியுள்ளது. இதனால் உதகை மினி காஷ்மீர் போல் காட்சி அளித்தது. கடும் உறைப்பனி பொழிவின் காரணமாக ஆட்டோக்கள் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களின் மீது உறைப் பனி சூழ்ந்து காணப்பட்டது. இதனால் வாகனங்களில் பெட்ரோல், டீசல் உறைவதால் காலையில் வாகனங்களை இயக்குவதில் சிரமம் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். உறைபனியின் தாக்கம் வழக்கத்தைவிட இன்று அதிகரித்துள்ளதால் அதிகாலை விவசாயம் மற்றும் தேயிலை பறிக்கும் தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்படைந்து உள்ளது என பொது மக்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து உறைபனியால் கடும் குளிர் நிலவுவதால் காலை 9 மணிக்கு பின்பும் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடந்தனர். குளிரை சமாளிக்க பொதுமக்கள் ஆங்காங்கே தீ மூட்டி வெப்பத்தை ஏற்படுத்திக் கொண்டனர். வரும் நாட்களில் பனிப் பொழிவு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், வெப்பநிலை பூஜ்யம் டிகிரி செல்ஸியசுக்கு செல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்