Crime : குடும்ப தகராறில் மனைவியை கல்லால் அடித்து கொலை செய்த கணவர் கைது
கோவை மாவட்டம் பெரிய மோப்பிரிபாளையம் பகுதியில் குடும்ப தகராறில் மனைவியை கல்லால் அடித்து கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டார்.
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த பெரிய மோப்பரிபாளையம் பகுதியில் மேட்டுப்பாளையம் கரட்டுமேடு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் (61) என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவரது மனைவி கலாமணி (55) உடன் கடந்த இரண்டு நாட்களாக குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் நேற்று காலை மீண்டும் இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது செல்வராஜ் வீட்டின் அருகே கிடந்த கல்லை எடுத்து அவரது மனைவி கலாமணியின் தலையில் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் இரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கலாமணி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கருமத்தம்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் தலைமறைவாக இருந்த செல்வராஜை கைது செய்த காவல் துறையினர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். மனைவியை கணவன் கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்றொரு சம்பவம்: ஆட்டோ டிரைவரை எரித்த கொன்ற இளைஞர் கைது
கோவை காளப்பட்டி அருகே உள்ள வீரியம்பாளையத்தை சேர்ந்தவர் ரவி (47). இவர் டாட்டா ஏசி லோடுஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று தனது ஆட்டோவில் மணிகண்டன் என்பவரிடம் அவர் பேசிக்கொண்டு இருந்தாா். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ரவி மீது ஊற்றிவிட்டு தீ பற்ற வைத்தார். இதில் ரவியின் உடல் முழுவதும் தீ பற்றி எரிந்தது. உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக சேர்ந்தனர். அங்கு ரவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனிடையே பெட்ரோல் ஊற்றி தீ வைத்த இளைஞர் அங்கிருந்து தப்ப முயன்றார். இதைத்தொடர்ந்து அங்கிருந்த பொதுமக்கள் இளைஞரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் ரவி மீது பெட்ரோலை ஊற்றி எரித்தது நேரு நகரில் வசித்து வரும் விருதுநகரை சோ்ந்த பூமாலை ராஜா என்பது தெரியவந்தது. இதையடுத்து பூமாலை ராஜாவை காவல் துறையினர் கைது செய்தனர். இதையடுத்து அவர் காவல் துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில் படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்காத விரக்தியில் இருந்து வந்த நிலையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறியுள்ளார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் ரவியுடன் தகராறு ஏற்பட்ட போது தகாத வார்த்தைகளால் பேசியதால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். இதனிடையே ரவியின் உறவினர்கள் குற்றவாளி மீது உரிய நடவடிக்கைகள் மற்றும் சரியான விசாரணை நடத்த வேண்டும் எனவும், ரவியின் இரண்டு பெண் குழந்தைகளின் கல்விக்கு கோவை மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்