Watch Video: கும்பலாக சுத்துவோம்.. முதுமலை புலிகள் காப்பகத்தில் கூட்டம் கூட்டமாக காட்டு யானைகள்!
மசினகுடி - கூடலூர் சாலையில் இரு குட்டிகளுடன் 7 காட்டு யானைகள் சாலைக்கு வந்தது. சாலையில் யானை கூட்டம் வாகனங்கள் வருவதை பொருட்படுத்தாமல், கூட்டமாக ஒய்யாரமாக நடந்து சென்றது.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக பகுதியில் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக உலா வருகின்றன.
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக பகுதியில் கூட்டம் கூட்டமாக உலா வரும் காட்டு யானைகள்@abpnadu pic.twitter.com/9I0oVdPam4
— Prasanth V (@PrasanthV_93) December 4, 2021
வட கிழக்கு பருவ மழை காரணமாக தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. மலைகளின் அரசி என அழைக்கப்படும் மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாத காலமாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி உள்ளதோடு, வனப்பகுதிகள் முழுவதும் பச்சை பசேலென காட்சி அளிக்கிறது. முதுமலை புலிகள் காப்பக பகுதி புலி, காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகளின் புகலிடமாக திகழ்ந்து வருகிறது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களில் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இந்நிலையில் கேரளா, கர்நாடகா ஆகிய மாநில வனப் பகுதியில் இருந்து யானை உட்பட வன விலங்குகள் உணவு தேடி இடம் பெயர்ந்து முதுமலை புலிகள் காப்பகம் வனப்பகுதிக்கு வந்த வண்ணம் உள்ளன. காட்டு யானைகள் வலசை செல்லும் காலம் என்பதாலும், அதிகளவிலான யானைகள் முதுமலை புலிகள் காப்பகத்தின் வழியாக இடம் பெயர்ந்து செல்கின்றன.
இந்நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட மசினகுடி - கூடலூர் சாலையில் இரு குட்டிகளுடன் 7 காட்டு யானைகள் சாலைக்கு வந்தது. சாலையில் யானை கூட்டம் வாகனங்கள் வருவதை பொருட்படுத்தாமல், கூட்டமாக ஒய்யாரமாக நடந்து சென்றது. இதனால் அச்சமடைந்த வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை பின்னோக்கி இயக்கிச் சென்றனர். சிறிது தூரம் சாலையில் சென்ற யானை கூட்டம் பின்பு வனப் பகுதிக்குள் மீண்டும் சென்றது. இருப்பினும் பெண் ஒற்றை யானை ஒன்று சாலையில் நின்று கொண்டிருந்த போது, அப்போது இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் எதிர்பாராத விதமாக யானையின் அருகே சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் அந்த யானை அந்த இருசக்கர வாகன ஓட்டிகளை எவ்வித இடையூறும் செய்யாமல் வனப் பகுதிக்குள் சென்றது.
யானைகள் கூட்டமாக உலா வரும் காட்சிகளை வாகன ஓட்டிகள் செல்போனில் பதிவு செய்து வெளியிட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில் கூட்டம் கூட்டமாக காட்டு யானைகள் சாலையோரங்களில் உலா வருவதால், வாகன ஓட்டிகள் யானைகளுக்கு எவ்வித இடையூறும் செய்யாமல் கவனமாக வாகனங்களை இயக்க வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.