(Source: ECI/ABP News/ABP Majha)
கோவையில் கனமழையால் சாலைகளில் தேங்கிய வெள்ள நீர்; வாகன ஓட்டிகள் அவதி
கோவையில் கொட்டித் தீர்த்த கனமழையால் பல்வேறு இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர்.
தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்த நிலையில், கடந்த மாதத்தில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்தது. இதனைத் தொடர்ந்து கடந்த சில வாரங்களாக மழை குறைந்து காணப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் மழை பெய்து வருகிறது. கோவை மாநகர் பகுதிகளில் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் பல்வேறு இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. கோவை மாநகர பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து விட்டு விட்டு மிதமான மற்றும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் நீர் வரத்து அதிகரிப்பு காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இன்னும் சில நாட்களுக்கு கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் தொடர் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கோவை மாநகரப் பகுதிகளில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலை நேரத்தில் பரவலாக கனமழை பெய்தது. காந்திபுரம், டவுன்ஹால், சிங்காநல்லூர், ராமநாதபுரம், கவுண்டம்பாளையம், வெள்ளலூர் உள்ளிட்ட பகுதிகளில் விட்டு விட்டு கனமழை கொட்டியது. இதன் காரணமாக ரயில் நிலையம், சாய்பாபா காலணி, இராமநாதபுரம், வடகோவை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
கோவை அரசு மருத்துவமனை அருகேயுள்ள லங்கா கார்னர் பகுதி ரயில்வே தரைப்பாலத்தின் அடியில் வெள்ள நீர் தேங்கியதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல அவிநாசி சாலை மேம்பாலத்தின் அடியில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதேபோல கோவையில் பல்வேறு சாலைகள் சேதமடைந்து உள்ள நிலையில், மழை நீரும் சேர்ந்து இருப்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கோவை மாநகரப் பகுதிகளில் ரயில்வே மேம்பாலங்கள் அடியிலும், பல்வேறு சாலைகளிலும் மழைநீர் தேங்கி நிற்பதும், போக்குவரத்து பாதிக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்பதைத் தடுக்க கோவை மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கோவை மாவட்டத்தை பொறுத்தவரை தென் மேற்கு பருவமழை காலத்தில் சராசரியாக 210 மி.மீ மழை பெய்யும். நடப்பாண்டில் ஜூன் மாதத்தில் 43 மி.மீ, ஜூலையில் 69 மி.மீ, ஆகஸ்டில் 31 மி.மீ மற்றும் செப்டம்பரில் 68 மி.மீ என மொத்தம் 211 மி.மீ வரை மழை பெய்யும் என எதிர் பார்க்கப்பட்டது. இந்நிலையில் பருவமழை தொடங்கிய ஜூன் மாதம் 10 மி.மீ வரை மட்டுமே மழை பதிவானது. பின்னர், ஜூலை மாதம் 2-வது வாரத்தில் பருவமழை தீவிரமடைந்தது. ஆகஸ்டு முதல்வாரத்தில் மழையின் தீவிரம் குறைந்தது. பின்னர், மீண்டும் தற்போது பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை காலம் முடிய இன்னும் ஒருமாதம் உள்ள நிலையில், இன்னும் கூடுதல் மழை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்