’இரண்டே ஆண்டில் மக்கள் வெறுப்பை திமுக அரசு சந்தித்துள்ளது’ - எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
”முதல்வர் ஸ்டாலின் செய்கிற ஒரே வேலை அதிமுக நிர்வாகிகள் மீது வழக்கு போடுவது மட்டுமே. தற்போது அதிமுக கொண்டு வந்த நிறைய திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.”
இரண்டே ஆண்டில் மக்கள் வெறுப்பை சந்திக்கிற அரசாக திமுக உள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்ற பிறகு எடப்பாடி பழனிச்சாமி முதன் முறையாக கோவைக்கு வருகை தந்தார். கோவை காளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக சார்பில் அவருக்கு வரவேற்பு மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். விழாவில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, ”ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எவ்வளவோ பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். பொதுச் செயலாளராக தேர்ந்தெடுத்த அனைவருக்கும் நன்றி. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இரு பெரும் தலைவர்கள் பொதுச் செயலாளர் பதவியில் இருந்த நிலையில், எளிய தொண்டனாக இருந்த நான் பதவி ஏற்றுள்ளேன்.
ஆனால் திமுகவில் அப்படி வர முடியாது. வாரிசு மட்டுமே தலைவர் பதவிக்கு வந்துள்ளனர். ஜனநாயக ரீதியாக உள்ள கட்சி இந்தியாவில் அதிமுக மட்டுமே. வேறு எந்த கட்சியிலும் எளிய தொண்டன் உயர்ந்த நிலைக்கு வர முடியாது. திமுக ஒரு கம்பெனி போல் செயல்பட்டு வருகிறது. திமுகவில் ஆட்சியிலும், கட்சியிலும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தான் உயர் பதவியில் இருக்கிறார்கள். அதிமுக ஆட்சியில் இருந்த போது பொற்கால ஆட்சியை கொடுத்ததோம். ஆனால் இரண்டே ஆண்டில் மக்கள் வெறுப்பை சந்திக்கிற அரசாக திமுக மாறியுள்ளது. ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசாங்கம் இந்தியாவில் திமுக மட்டும்தான். அதிமுக மக்களுக்கு சேவை செய்கிற இயக்கம்.
முதல்வர் ஸ்டாலின் செய்கிற ஒரே வேலை அதிமுக நிர்வாகிகள் மீது வழக்கு போடுவது மட்டுமே. தற்போது அதிமுக கொண்டு வந்த நிறைய திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை அறிவித்தது அதிமுக. அவிநாசி சாலையில் 10 கிலோமீட்டர் நான்கு வழிச்சாலை மேம்பாலம், கோவை - பொள்ளாச்சி 40 கிலோ மீட்டர் நான்கு வழிச்சாலை கொண்டு வந்தது அதிமுக ஆட்சியில் தான். அதேபோல திமுக எந்த புதிய திட்டத்தையும் கோவைக்கு அறிவிக்கவில்லை. தமிழகத்திலேயே 10 தொகுதியில் வெற்றி பெற்று வரலாறு படைத்த மாவட்டம் கோவை. வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற வேண்டும்” எனத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்