’மாட்டிறைச்சி சாப்பிடுவாயா?’ இஸ்லாமிய மாணவியை இழிவுபடுத்திய ஆசிரியை - கோவையில் புகார்
மாட்டிறைச்சி சாப்பிடுவாயா? என சக மாணவர்கள் முன்னிலையில் வைத்து கேட்டதுடன், சூவையும் துடைக்க வைத்ததாக பெற்றோருடன் முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆசிரியை மீது மாணவி புகார் அளித்துள்ளார்
கோவை துடியலூரில் அரசு பள்ளியில் இஸ்லாமிய மாணவியை, மாட்டிறைச்சி சாப்பிடுவாயா என சக மாணவர்கள் முன்னிலையில் வைத்து கேட்டதுடன், சூவையும் துடைக்க வைத்ததாக பெற்றோருடன் முதன்மை கல்வி அலுவலகத்தில் மாணவி புகார் அளித்துள்ளார்.
மாட்டிறைச்சி சாப்பிடுவியா?
கோவை துடியலூர் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஏழாம் வகுப்பில் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த மாணவி ஒருவர் பயின்று வருகிறார். இவர் இன்று கோவை முதன்மை கல்வி அலுவலகத்தில் தனது பெற்றோருடன் வந்து ஆசிரியை அபிநயா மீதும், பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி மீதும் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் வகுப்பு ஆசிரியை அபிநயா என்பவர் மாணவியிடம் கடுமையாக நடந்து கொண்டதாகவும், இதை தொடர்ந்து மாணவி பெற்றோருடன் வந்து ஆசிரியை அபிநயா குறித்து தலைமை ஆசிரியரிடம் முறையிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தலைமை ஆசிரியரிடம் முறையிட்டது குறித்து ஆசிரியை அபிநயா மாணவியிடம் வகுப்பறையில் கேட்டதாகவும், அப்போது ’உனது பெற்றோர் என்ன வேலை செய்கின்றனர்?’ என்ற கேள்விக்கு, மாட்டிறைச்சி கடை வைத்திருப்பதாக மாணவி தெரிவித்துள்ளார். அதற்கு "மாட்டுக்கறி சாப்பிட்டு திமிருடன் ஆடுறியாடி" என்று ஆசிரியர் அபிநயா சொன்னதாகவும், அதற்கு மாணவி எனது பெற்றோரை பற்றியும் தொழிலை பற்றியும் ஏன் பேசுகிறீர்கள் என்று பதிலுக்கு பேசியதற்கு, ஆத்திரம் நடந்த ஆசிரியை அபிநயா மாணவியை கண்ணத்தில் அடித்ததாகவும் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷூ-வை துடைக்க வைத்தாரா?
இதுகுறித்து பெற்றோருடன் பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரிடம் முறையிட்ட பொழுது அவரும் மிரட்டுகின்றீர்களா? என்று கூறியதாகவும், மாட்டுக்கறி சாப்பிடுவியா என்று சக மாணவிகள் மத்தியில் வைத்து கேட்டும், சூவை துடைக்க வைத்தும் துன்புறுத்தியதாகவும், தனது படிப்புக்கு இவர்களால் பாதிப்பு இருக்கும் என்ற அச்சமாக இருப்பதாகவும் கூறி மாணவி இன்று கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேட்டி அளித்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்ததாகவும், காவல் துறையினர் விசாரித்து உரிய அறிவுரை வழங்கியதுடன், பள்ளிக்கு செல்ல அறிவுறுத்திய நிலையில் மீண்டும் திரும்பவும் மாணவியை மிரட்டும் சம்பவம் நடைபெற்றதால் புகார் அளித்து இருப்பதாகவும் தெரிவித்தனர். இதனிடையே பெற்றோருடன் வந்து ஏழாம் வகுப்பு மாணவி புகார் அளித்த நிலையில், இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரியிடம் விளக்கம் கேட்க நாம் பல முறை தொடர்பு கொண்ட போதும், அவர் பதிலளிக்கவில்லை. இந்த சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.