கொடூரமாக மாடுகள் மீது ஆசிட் வீசியவர்கள் கண்டுபிடிப்பு - விசாரணையில் அதிர்ச்சி தகவல்
மேய்ச்சலுக்கு சென்ற எருமை மாடுகள், அங்கிருந்த நர்சரியை சேதப்படுத்தியதும், இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதும் தெரியவந்தது. இதனால் 20 எருமைகள் மீது ஆசிட் ஊற்றியதும் விசாரணையில் தெரியவந்தது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் - உதகை சாலையில் உள்ள ரயில்வே கேட் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். 39 வயதான இவர் விவசாயியாக உள்ளார். இவர் 10 ஏக்கர் விவசாய விளை நிலத்தை குத்தகைக்கு எடுத்தும், தனக்கு சொந்தமான 2 ஏக்கர் விவசாய விளை நிலத்தில் பாக்கு மற்றும் வாழைகளை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார். மேலும் ஆடு, மாடு மற்றும் எருமை மாடு என கால்நடைகளையும் வளர்த்து பராமரித்து வருகிறார். தினசரி காலை 8 மணிக்கு விவசாய கூலி தொழிலாளி கால்நடைகளை மேய்ச்சலுக்காக அருகே உள்ள வயலுக்கு அழைத்துச் சென்று விட்டு, மாலை நேரத்தில் கால்நடைகளை திரும்பவும் ஓட்டி வந்து வீட்டில் கட்டி விட்டு சென்று விடுவது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு யாரோ அடையாளம் தெரியாத மர்ம ஆசாமிகள் கால்நடைகளின் முகம் மற்றும் உடலின் மேல் பகுதியில் ஆசிட்டை வீசியும், ஊற்றியதாகவும் தெரிகிறது. இந்த சம்பவம் குறித்து விவசாயி ராஜ்குமாருக்கு உடனடியாக தெரியவில்லை. இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பசு மற்றும் எருமை மாடுகளின் உடலில் திடீரென ஏற்பட்ட மாற்றங்கள் தெரியவந்தது.
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட கால்நடைகள் தாங்கள் படும் வேதனைகளை வெளியே சொல்ல முடியாமலும், எரிச்சலை தாங்க முடியாமலும் கத்திக் கொண்டே இருந்துள்ளன. ஆசிட் வீச்சால் பசு மற்றும் எருமை மாடுகளின் முகம் மற்றும் உடலின் இரண்டு புறமும் மேல் பகுதியில் தோல் வெந்து உரிந்து கருகி காணப்பட்டது. இதனைக் கண்டதும் விவசாயி ராஜ்குமார் அதிர்ச்சி அடைந்தார். ஆசிட் வீசியதால் எரிச்சலால் அவதிப்பட்டு வந்த 4 பசு மாடு உள்பட 20 எருமை மாடுகளின் நிலை கண்டு அவர் கவலை அடைந்தார்.
இது குறித்து விவசாயி ராஜ்குமார் மேட்டுப்பாளையம் காவல் துறை வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவர் அலுவலருக்கு தகவல் அளித்தார். இதன் பேரில் வந்த கால்நடை மருத்துவ குழுவினர் ஆசிட்டால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். முன் விரோதம் காரணமாக கால்நடைகள் மீது ஆசிட் வீசினார்களா அல்லது வேறு எதேனும் காரணமா என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். கல்லார் பகுதியில் கால்நடைகளின் மீது ஆசிட் வீசிய கொடூர சம்பவம் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எருமை மாடுகள் மீது ஆசிட் ஊற்றியது தொடர்பாக விவசாயி ராஜ்குமார் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (51) என்பவருக்கு சொந்தமான இடத்திற்கு மேய்ச்சலுக்கு சென்ற எருமை மாடுகள், அங்கிருந்த நர்சரியை சேதப்படுத்தியதும், இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதும் தெரியவந்தது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ரவிச்சந்திரன் கூலித் தொழிலாளியான மணிகண்டன் (29) என்பவருடன் இணைந்து 20 எருமைகள் மீது ஆசிட் ஊற்றியதும் தெரியவந்தது. இதையடுத்து ரவிச்சந்திரன் மற்றும் மணிகண்டன் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்