அடாவடித்தனமாக அரசியல் நெருக்கடிகளை உருவாக்க வேண்டுமென ஆளுநர் செயல்படுகிறார் - முத்தரசன் குற்றச்சாட்டு
”ஆளுநர்களுக்கு தனி அதிகாரம் கிடையாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதற்கு பிறகும் அடாவடித்தனமாக அரசியல் நெருக்கடிகளை உருவாக்க வேண்டுமென ஆளுநர் செயல்படுகிறார்”
கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “ஜனநாயக நாடான இந்தியா, எப்படி இயங்க வேண்டுமென அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளது. ஆட்சியை யார் வேண்டுமானாலும் நடத்தலாம். அரசியலமைப்பு சட்டத்தின் வழிகாட்டுதல்படி செயல்பட்டால் தான் நாடு ஜனநாயக நாடாக இருக்கும். பிரதமர் மோடி படிப்படியாக அரசியலமைப்பு சட்டங்களை தகர்த்து வருகிறார். எதேச்சதிகாரமான செயல்பாடுகள் அதிகரித்து வருகிறது.
ஹிட்லர், கோயபல்ஸ் மாதிரி மோடி, அமித்ஷா கூட்டணி மிக மிக மோசமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். மோடி அமித்ஷா கூட்டணி மாற்றுக்கருத்துகளுக்கு இடம் தராமல், அவர்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என எத்தகைய தவறான நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது. சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகள் சுதந்திரமாக செயல்பட அனைத்து அதிகாரமும் உள்ளது. ஆனால் பாஜகவிற்கு எதிராகவும், பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை தவறான முறையில் பயன்படுத்தப்படுகிறது.
ஆளுநர்கள் தவறான முறையில் பயன்படுத்தப்படுகிறார்கள். அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல் சர்வதிகார முறையில் மோடி, அமித்ஷா கூட்டணி நாடு முழுவதும் மேற்கொண்டுள்ளது. சிபிஐ, வருமானவரித்துறை நடவடிக்கைகள் அனைத்தும் எதிர்கட்சிகளுக்கு எதிராக மட்டும் தான் எடுத்துள்ளது. அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள். அமைச்சர் செந்தில் பாலாஜி விசாரணைக்கு ஒத்துழைக்க தயார் என சொன்ன பிறகும் சமூக விரோதி, கொலை குற்றவாளி போல விசாரணை நடத்தியுள்ளனர். தலைமை செயலருக்கு தெரியாமல் திறந்த வீட்டில் நாய் புகுந்த மாதிரி சோதனை நடத்தியிருப்பது இது ஜனநாயக நாடு தானா என்ற கேள்வியை எழுப்புகிறது.
அமைச்சரவையில் யார் இடம் பெற வேண்டுமென முடிவு செய்ய வேண்டியது முதலமைச்சர் தான். முதலமைச்சர் பரிந்துரை செய்பவர்களுக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும். அமைச்சர்களை தீர்மானிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது. செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் வேறு இரண்டு அமைச்சர்களுக்கு பொறுப்புகளை அளித்து அனுப்பிய கடிதத்தை ஆளுநர் திருப்பி அனுப்புகிறார். ஆளுநருக்கு இப்படிப்பட்ட அதிகாரங்களை யார் தந்தார்கள்? ஆளுநர் ஆளுநராக செயல்பட வேண்டும். ஆளுநர்களுக்கு தனி அதிகாரம் கிடையாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதற்கு பிறகும் அடாவடித்தனமாக அரசியல் நெருக்கடிகளை உருவாக்க வேண்டுமென ஆளுநர் செயல்படுகிறார். ஆளுநர் பாஜக ஏஜெண்ட் போல செயல்படுகிறார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசிற்கு எதிராக ஆளுநர் போட்டி அரசாங்கத்தை நடத்துகிறார். கிண்டி பல்நோக்கு மருத்துவமனை திறப்பு விழாவிற்கு குடியரசு தலைவருக்கு முதலமைச்சர் அழைப்பு விடுத்தார். அந்நிகழ்ச்சிக்கு குடியரசு தலைவர் வரக்கூடாது என உத்தரவு பிறப்பிப்பவர்கள் யார்? குடியரசு தலைவர் ஒரு கட்சிக்கு கட்டுப்பட்டவரா? ஜனநாயக விரோத போக்கை ஒன்றிய அரசு கடைபிடித்து வருகிறது. ஊழலை ஒழிப்பதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மாற்று கருத்து இல்லை. ஊழலை ஒழிப்பேன் என சொல்லும் மோடி, கர்நாடகாவில் 40 சதவீத கமிசன் வாங்கிய பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. ஊழல் நடக்கிறது என சொன்னவர்கள் மீது வழக்கு போடப்படுகிறது.
2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற மாட்டோம் என்ற முடிவுக்கு பாஜக வந்து விட்டது. மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வருவது சாத்தியமில்லை என்பதால் அமலாக்கதுறை, வருமான வரித்துறை, சிபிஐ ஆகியவற்றை தவறாக பயன்படுத்தி கொல்லைப்புற வழியாக வெற்றி பெற பார்க்கிறார்கள். இந்த சர்வதிகார, பாசிஸ்ட்களுக்கு எதிராக தேர்தலில் மக்கள் நல்ல தீர்ப்பு வழங்குவார்கள். அமலாக்கத்துறை பதிவு செய்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழல் வழக்குகளில் ஒன்று கூட நிரூபிக்கவில்லை. பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் வழக்குகள் போடப்படுகிறது.
அரசியல் பழிவாங்கலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஏற்காது. அமலாக்கத்துறை அண்ணாமலை கட்டுப்பாட்டில் உள்ளதா? மோடி, அமித்ஷா கூட்டணியின் முழு பாதுகாப்பு ஆளுநருக்கு உள்ளது. அவர் மீது குடியரசு தலைவரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேட பாஜக முயற்சிக்கிறது” எனத் தெரிவித்தார்.