Crime: சட்ட விரோதமாக இந்தியாவில் தங்கியிருந்த நைஜீரியா இளைஞர் கைது
மும்பையில் தனது நண்பர்களுடன் தங்கியிருந்து மும்பை மற்றும் திருப்பூர் மாநகரில் உள்ள பல இடங்களுக்கு சென்று டி-ஷர்ட்களை மலிவு விலைக்கு வாங்கி நைஜீரியாவிற்கு ஏற்றுமதி செய்து வந்தது தெரியவந்தது.
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஹோல்சேல் மற்றும் ரீடைலில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக சூலூர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திர பிரசாத் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் அப்பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த டாட்டா ஏஸ் மினி டிரக்கை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அதில் விற்பனைக்காக 5 கிலோ கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் மினி ட்ரக்கை ஓட்டி வந்த நபரைப் பிடித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
காவல் துறையினர் விசாரணையில் அவர் இருகூர் பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பதும், ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து நீலாம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கஞ்சா ஹோல்சேல் மற்றும் ரீடைல் விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து 5 கிலோ கஞ்சா, 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய டாடா ஏஸ் மினி டிரக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் நாகராஜை கைது செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சூலூர் பகுதியில் 54 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்ட வழக்கில் நாகராஜ் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கையின் பேரில், கடந்த 01.01.2024 முதல் தற்போது வரை காவல் துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 11 நபர்கள் மீது 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து சுமார் 7.680 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவர்கள் குறித்து கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமாக தங்கிருந்தவர் கைது
கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த எம்மா (எ) இமானுவேல் என்பவர் மூச்சுத்திணறல் பிரச்சனைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் முறையான பாஸ்போர்ட் மற்றும் விசா தகவல்களை தரவில்லை எனவும் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட போது, இந்தியாவிற்கு வந்தது மற்றும் இங்கு தங்கி இருப்பது பற்றியும், அவருடைய பாஸ்போர்ட் மற்றும் விசா தொடர்பான தகவல்களை முறையான தகவல்களை தரவில்லை. இதையடுத்து அவர் மீது பந்தய சாலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் நடத்திய விசாரணையில் அவர், நைஜீரியாவில் இருந்து வந்து மும்பையில் தனது நண்பர்களுடன் தங்கியிருந்து மும்பை மற்றும் திருப்பூர் மாநகரில் உள்ள பல இடங்களுக்கு சென்று டி-ஷர்ட்களை மலிவு விலைக்கு வாங்கி இங்கிருந்து நைஜீரியாவிற்கு ஏற்றுமதி செய்து வந்தது தெரியவந்தது. அவரது பாஸ்போர்ட் மற்றும் விசா பல வருடங்களுக்கு முன்பே காலாவதியானதும், சட்ட விரோதமாக இந்தியாவில் அவர் குடியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சிகிச்சை முடித்து வெளியே வந்த அவரை போதிய ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவில் சட்டவிரோதமாக தங்கி இருந்ததற்காக கைது செய்த காவல் துறையினர், சிறையில் அடைத்தனர்.