கோவை போலீசாருக்கு வார விடுமுறை; காவல் ஆணையாளர் உத்தரவு
கோவை மாநகர காவல் ஆணையாளராக பொறுப்பேற்றுள்ள தீபக் எம் தமோர் மாநகரில் உள்ள போலீசாருக்கு வார விடுமுறையை அறிவித்துள்ளார்.
கோவை மாநகர காவல்துறையில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு வார விடுமுறை வழங்க மாநகர காவல் ஆணையர் தீபக் எம் தாமோர் உத்தரவிட்டுள்ளார்.
கோவை மாநகர காவல் துரை நிர்வாகம் காவல் ஆனையாளர் தலைமையில் நடைபெறுகிறது. கோவை மாநகர காவல் துறையின் கீழ் 15 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.4 துணை ஆனையாளர்கள், கூடுதல் துணை ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், ஆய்வாளர்கள், காவலர்கள் என மொத்தம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். வழக்கமான சட்டம் ஒழுங்கு, குற்றத் தடுப்பு பணிகள், புலன் விசாரணை, ரோந்துப் பணி, போக்குவரத்து சீரமைப்பு உள்ளிட்ட பணிகளில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ச்சியாக கண்காணிப்பு பணி, விசாரணைப் பணி போன்றவற்றில் காவல் துறையினர் பணியாற்றி வருகின்றனர்.
இதனால் காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை வேலை பளு கூடுகிறது. இதன் காரணமாக மனம் அழுத்தத்தில் உள்ள காவலர்கள், புகார் அளிக்க வரும் பொதுமக்களிடமும், பொது இடங்களிலும் அவ்வப்போது கடுமையாக நடந்து கொள்கின்றனர் என புகார்கள் எழுந்து வருகின்றன. எனவே மன அழுத்தத்தை போக்கும் வகையில் காவலர்களுக்கு யோகா, உடற்பயிற்சிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து மேற்கு மண்டலத்தில் உள்ள காவலர்களுக்கு கடந்த சில வருடங்களாக பிறந்த நாள் மற்றும் திருமண நாளை முன்னிட்டு அன்றைய தினம் விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கோவை மாநகர காவல் ஆணையாளராக பொறுப்பேற்றுள்ள தீபக் எம் தமோர் மாநகரில் உள்ள போலீசாருக்கு வார விடுமுறையை அறிவித்துள்ளார். துணை ஆணையர்கள் முதல் காவலர்கள் வரை சுழற்சி முறையில் வார விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளார். இதன்படி துணை ஆணையார்கள், உதவி ஆணையாளர்கள், ஆய்வாளர்கள் ஆகியோர் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வார விடுமுறை எடுத்துக் கொள்ளலாம். அவர்களுக்கு காவல் ஆணையாளர் அலுவலகம் மூலம் விடுமுறை வழங்கப்படும். சுழற்சி முறையில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படும். உதாரணமாக 2 சனிக்கிழமைகளில் விடுமுறை எடுத்தால், அடுத்த 2 ஞாயிற்றுக் கிழமைகளில் விடுமுறை எடுத்துக் கொள்ளும் வகையில் பிரிக்கப்பட்டுள்ளது. விடுமுறையில் உள்ள அதிகாரிகளின் பணியை, அன்று பணியில் உள்ள அதே ரேங்க் உடைய அதிகாரிகள் கூடுதலாக கவனித்துக் கொள்ள வேண்டும். மற்ற காவலர்களுக்கு அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர் வார விடுமுறையை ஒதுக்கி அதற்கான அட்டவணையை தனக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இந்த வார விடுமுறை இந்த மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளது. வார விடுமுறை அளித்து இருப்பதன் காரணமாக காவலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.