கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம்: சூடு பிடிக்கும் சிபிசிஐடி விசாரணை
கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தன்று குற்றவாளிகளை தப்பிக்க வைத்து விவகாரம் தொடர்பாக கூடலூரில் இன்று சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்கள் திருடப்பட்டது. இது தொடர்பாக சயான், சதீசன், உதயகுமார், ஜம்சிர் அலி, தீபு, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ் உள்ளிட்ட 10 பேர் மீது கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இதனிடையே கோடநாடு வழக்கில் கூடுதல் விசாரணையை துவக்கிய நீலகிரி காவல் துறையினர், 5 தனிப் படைகள் அமைத்து கூடுதல் விசாரணை தீவிரப்படுத்தினர். சாட்சிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள், அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என கூடுதல் விசாரணை நடத்தப்பட்டது. இவ்வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட சயன், ஜம்சிர் அலி, சந்தோஷ் சாமி, மனோஜ் சாமி, சதீசன், பிஜின் குட்டி, தீபு உள்ளிட்டோரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி ரகசிய வாக்குமூலம் பெற்றனர். இதனிடையே கோடநாடு கம்யூட்டர் ஆப்ரேட்டர் தினேஷ்குமார் தற்கொலை வழக்கு மற்றும் கனகராஜ் விபத்து வழக்குகளை காவல் துறையினர் மறு விசாரணை நடத்தினர்.
இதனிடையே முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அதிமுக மாநில வர்த்தக அணி நிர்வாகி சஜீவன், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன் உள்ளிட்ட பலரிடம் தனிப்படை காவல் துறையினர் விசாரணை நடத்தினர். கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தனிப்படை காவல் துறையினர் 300 க்கும் மேற்பட்ட நபர்களிடம் இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கோடநாடு கொலை கொள்ளை வழக்கு சிபிசிஐடி விசாரணை மாற்றப்பட்டது. இந்நிலையில் இவ்வழக்கு தொடர்பான விசாரணை ஆவணங்களை சீல் வைக்கப்பல்ட்ட கவர்களில் வைத்து நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் தனிப்படை காவல் துறையினர் சமர்பித்தனர். இதையடுத்து ஏ.டி.எஸ்.பி முருகவேல் தலைமையில் மூன்று தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோடநாடு கொலை கொள்ளை வழக்கு குறித்து கடந்த வாரம் கோத்தகிரி அருகே உள்ள கெங்கரை கிராமத்தில், கணினி பொறியாளராக பணியாற்றி தற்கொலை செய்து கொண்ட தினேஷின் குடும்பத்தினரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். அதேபோல் இவ்வழக்கு தொடர்பாக முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுனர் கனகராஜ் கார் விபத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், கனகராஜன் மனைவி கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் உறவினர் ரமேஷ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து கொடநாடு கொலை கொள்ளை சம்பவத்தன்று குற்றவாளிகளை தப்பிக்க வைத்து விவகாரம் தொடர்பாக கூடலூரில் இன்று சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல அன்று இரவு கூடலூரில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவலர்கள் மற்றும் கேரளா எல்லையில் அமைந்துள்ள தமிழக எல்லையான நாடுகாணி சோதனை சாவடியில் பணியாற்றிய காவல் துறையினரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் அதிமுக வர்த்தக அணி தலைவர் சஜ்ஜீவனின் சகோதரர்கள் அனீஸ் மற்றும் சாஜீ ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















