கோவையில் சூதாட்டில் ஈடுபட்ட அதிமுக, திமுக பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு ; லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்
ஆளும் கட்சி கவுன்சிலரின் கணவர் சட்டவிரோதமாக சூதாட்ட விடுதி நடத்தி வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாநகராட்சி 30 வது வார்டு திமுக கவுன்சிலராக இருப்பவர் சரண்யா. இவரது கணவர் செந்தில்குமார். இவரும், அவரது தம்பி ரவிக்குமார் ஆகியோர் கணபதி பஜனை கோவில் தெருவில் சூதாட்ட விடுதி ஒன்றை நடத்தி வந்துள்ளனர். இது குறித்து காவல் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சரவணம்பட்டி காவல் துறையினர் கணபதி பகுதியில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு 25 பேர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்து சுமார் 12 லட்ச ரூபாய் பணத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும் அங்கிருந்த 25 நபர்களை காவல் துறையினர் கைது செய்தனர். 20 பேர் காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், 5 பேர் நீதிமன்ற காவலில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் தலைமுறைமாக உள்ள சூதாட்ட விடுதியை நடத்தி வந்த கவுன்சிலரின் கணவர் செந்தில் குமாரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். ஆளும் கட்சி கவுன்சிலரின் கணவர் சட்டவிரோதமாக சூதாட்ட விடுதி நடத்தி வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல கோவை ஆலாந்துறை பகுதியில் சட்ட விரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக மாவட்ட கவுன்சிலர் உட்பட 7 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். ஆலந்துறை அடுத்த உரிப்பள்ளம் புதூர் பகுதியில் கௌதம் என்பவரின் தோட்டத்தில் சூதாட்டம் நடப்பதாக ஆலந்துறை காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தனிப்பிரிவு மற்றும் ஆலாந்துறை காவல் துறையினர் சம்பவ இடத்தில் சென்று பார்த்த போது, அங்கு சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட ஏழு பேரை ஆலாந்துறை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் வைத்திருந்த ரூ.2.5 லட்சம் பணத்தை கைப்பற்றி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பிடிபட்டவர்களில் மத்துவராயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீப் என்வர் அதிமுக மாவட்ட கவுன்சிலர் என்பதும், மற்ற நபர்கள் கனகராஜ் (40), செல்வம் (55), கந்தசாமி (52), மாரியப்பன் (56), ராஜசேகரன் (45), கௌதம் (38) என்பதும் காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது. பிடிபட்ட அதிமுக மாவட்ட கவுன்சிலர் உட்பட 7 பேரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என கோவை மாவட்ட காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். கோவையில் ஒரே நாளில் சூதாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக, திமுக பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

