பிரேக் பிடிக்காமல் கடைக்குள் பாய்ந்த பேருந்து... குறுகிய சாலையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
பிரேக் பிடிக்காமல் கடைக்குள் புகுந்த தனியார் பேருந்து.

கோவை உப்பிலிபாளையம் பகுதியில் பிரேக் பிடிக்காமல் சென்ற தனியார் பேருந்து எலக்ட்ரிக்கல் கடைக்குள் புகுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
கோவை மாநகரில் உள்ள உப்பிலிபாளையம் மேம்பாலம் கீழ்பகுதியில் நேற்று மாலை இந்த விபத்து நடைபெற்றது. அந்த வழியாக வந்த தனியார் பேருந்து ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. பேருந்தின் பிரேக் சரியாக செயல்படாததால், சாலையோரத்தில் இருந்த எலக்ட்ரிக்கல் பொருட்கள் விற்கும் கடையை நோக்கி பேருந்து வேகமாக சென்றது.
பின்னர், ஓட்டுநர் பேருந்தை கட்டுப்படுத்த முயன்றும் முடியாமல், பேருந்து நேராக கடையின் முன்பகுதியை மோதியபடி உள்ளே புகுந்தது. இந்த விபத்தில் கடையின் முன்பகுதி சுவரும், கதவும் சேதமடைந்தது. கடைக்குள் இருந்த பொருட்களும் கீழே விழுந்து சேதமடைந்தன.
உயிர் தப்பிய மக்கள்
அதிர்ஷ்டவசமாக, விபத்து நடந்த நேரத்தில் கடையின் முன்பகுதியில் அதிக மக்கள் இல்லாததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. யாருக்கும் உயிர் சேதம் அல்லது கடுமையான காயம் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அருகிலிருந்த கடைகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. பேருந்து கடைக்குள் புகும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி, பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த பகுதி சாலை குறுகியதாக இருப்பதும், வாகன நெரிசல் அதிகமாக இருப்பதும் விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும், பேருந்தின் தொழில்நுட்ப கோளாறு காரணமா என்பதையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்





















