'உதயநிதியின் கார் கமலாலயத்திற்கு வர அருகதை இல்லை' - அண்ணாமலை காட்டம்
உதயநிதி ஸ்டாலின் கார் கமலாலயம் வர அருகதையில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் கார் கமலாலயம் வர அருகதையில்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக விமானம் மூலம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக அறிவிக்கப்படாத மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது. இந்த நிகழ்வுகள் கடந்த 2006 - 2013 வரை நடந்த திமுக இருண்ட கால ஆட்சியை நினைவூட்டுகிறது. மின்வெட்டுக்கு முதலமைச்சரும், அமைச்சரும் மத்திய அரசையே குற்றம் சாட்டி வருகின்றனர். இந்தியாவில் 777 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்தியாவில் 2.2 கோடி இருப்பு உள்ளது. மத்திய மின்துறை அமைச்சர் கூறிய தகவல் படி 30 நாட்களுக்கு தேவையான நிலக்கரி நம்மிடம் கையிருப்பு உள்ளது. அப்படி இருக்கும் போது தமிழகத்தில் மட்டும் எப்படி மின் வெட்டு பிரச்சினை உள்ளது?
போதிய நிலக்கரி இருந்தும், நிலக்கரி இல்லை என திமுக அரசு பஞ்சப்பாட்டு பாடி வருகிறது. அதே போல 5 நாட்களுக்கு தேவையான நிலக்கரி இருப்பு இருந்த போதும், தூத்துக்குடி அனுமின் நிலையத்தில் 4 யூனிட்டை தமிழக அரசு நிறுத்தியது. இது குறித்து மின் பிரச்சனை ஏதும் இல்லை என மத்திய அரசிடமும் தெரிவித்துள்ளது. தமிழக அரசு செயற்கையாக மின் வெட்டை உருவாக்கி, அதன் மூலம் தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்து அதன் மூலம் பணம் பார்க்க மட்டுமே முயல்கின்றனர். தமிழகத்திற்கு மின் உற்பத்திக்கு தினசரி செந்தில் பாலாஜி 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை. மேட்டூர், எண்ணூர், தூத்துக்குடி அனல் மின் நிலையங்களில் 85 % உற்பத்திக்கான திறன் தேவை இருந்தால் தான் இவ்வளவு தேவை. ஆனால் 57% தான் உள்ளது.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் யூனிட் 1, 2 ஆகியவற்றில் பி.ஆர்.ஜி நிறுவனத்தின் மோசமான வேலையால் செயல் திறன் குறைந்துள்ளது. வேண்டுமென்றே மின்துறை அமைச்சர்களுக்கு கமிசன் வருவதற்காக இவ்வாறு மோசமாக வேலை செய்து வருகிறது. தமிழக மின் உற்பத்திக்கு 50 ஆயிரம் டன் நிலக்கரி போதுமானது. ஆனால் செயற்கையாக தட்டுப்பாட்டை உருவாக்கிறார்கள். கடந்த 15 ஆண்டுகளாக பணம் சம்பாதிக்க மின்துறையை வைத்துள்ளனர். மின்துறை அழியும் நிலையில் உள்ளது. ஆனால் மின் வாரியத்தை வைத்து மத்திய அரசை குற்றம் சாட்டி வருகின்றனர்.
கடந்த 2006 - 2022 வரை மின்துறை செயல்பாடுகள் குறித்த வெள்ளையறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும். கடந்த 2 நாட்களாக தெலுக்கான மாநிலத்தில் உள்ள கிராமத்திற்கு கட்சி பணிக்கு சென்றோம், அங்கு மின்வெட்டு இல்லை. தமிழகத்தில் சூரிய மின் உற்பத்தி 3,275 மைகா வாட் அளவிற்கு வேண்டும். ஆனால் தமிழகத்தில் 325 மெகா வாட் மட்டுமே உள்ளது. திமுக அரசில் 1 மெகா வாட் சூரிய மின் உற்பத்திக்கு அமைக்க ரூ.20 லட்சம் அமைச்சருக்கு கொடுக்க வேண்டும். அதே போல் கடந்த 2020ம் ஆண்டு இடையர்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைக்க ரூ.224 கோடி ஒதுக்கட்டுள்ளது. மார்ச் 2021க்கு பணிகள் முடிக்க வேண்டிய நிலையில் 20 சதவீதம் பணி மட்டும் நடந்துள்ளது. தமிழக முதலமைச்சருக்கு கடிதம் எழுதுவது மட்டுமே வேலையாக உள்ளது. மத்திய அரசையே குறை கூறிக்கொண்டிருந்தால் தமிழக அரசு எதற்கு என கேள்வி எழுப்பிய அவர் மக்கள் வரி பணம் எதற்கு?
தமிழக அரசை மத்திய அரசிடம் கொடுத்து விடுங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். சென்னையில் ஜெயிலில் விக்னேஷ் உயிரிழக்கவில்லை என கூறிவிட்டு, அவர் குடும்பத்திற்கு போலீசார் ரூ.1 லட்சம் கொடுத்துள்ளனர். எந்த மாநிலத்திற்கும் நிலக்கிரி குறைவாக கொடுத்து மத்திய அரசு மின்வெட்டு ஏற்படுத்தவில்லை. மின்துறையில் பல லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதற்கு விசாரணை கமிஷன் அமைத்து, அலுவலக உதவியாளர் வரை விசாரணை நடத்த வேண்டும். இசைஞானி இளையராஜவிற்கு பாரத ரத்தினா கிடைக்க வேண்டும். அவரை இழிவுபடுத்துவது சரியல்ல. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை. ஆளுநர் கார் மீது தாக்குதல் நடத்தியவர்களை மாலையில் பிணையில் விடுவிக்கின்றனர்.
தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கலந்து கொள்ளக் கூடாது என கடிதம் எழுதியுள்ளார். கடந்த 2004ல் தலைமை நீதிபதி பங்கேற்கும் நிகழ்ச்சியில் ஜெயலலிதா பங்கேற்க கூடாது என திமுக கடிதம் எழுதியது. அதன் அடிப்படையில் ஜெயலலிதா கலந்து கொள்ளவில்லை. அதே போல் அமைச்சர் ரகுபதி மீது வழக்கு உள்ள போது அந்த மேடையில் நீதிபதி எப்படி அமர முடியும்? எனவே நீதிபதிகள் விழாவை புறக்கணிக்க வேண்டும். அல்லது அமைச்சர் கலந்து கொள்ள கூடாது. தமிழகத்தில் ஆளுநருக்கு பாதுகாப்பு இல்லை, ஆளுநர் கார் மீது தாக்குதல் நடந்துள்ளது. டிஜிபி அமைதி காப்பது வேதனையளிக்கிறது. டிஜிபி சம்பவ இடத்திற்கு சென்றிருக்க வேண்டும். உதயநிதி ஸ்டாலின் கார் கமலாலயம் வர அருகதையில்லை. அதற்கு முதலில் மக்களுடன் நின்று சேவை செய்திருக்க வேண்டும். அவர் முயன்றாலும், ரஜினி படத்தில் வருவது போல் வாகனம் ஸ்டார்ட் ஆகாது” என அவர் தெரிவித்தார்.