அரக்கோணம் முதல் அச்சரப்பாக்கம் வரை விரிவடைகிறதா சென்னை மாநகரம்..? அமைச்சர் சொன்ன தகவல்!
சென்னை முழுமை திட்டம் 3 - ன் படி அரக்கோணம், அச்சரபாக்கம் போன்ற பகுதிகள் வரை விரிவடைய உள்ளதாக வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் , சென்னை பெருநகர பகுதிக்கான மூன்றாம் முழுமை திட்டம் ( 2027 - 2046 ) தொலைநோக்கு ஆவணம் தயாரித்தலின் திட்ட தொடக்க பயிலரங்கம் இன்று நடைபெற்றது.
இதில் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் அன்பரசன் , சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் , திரு.வி.க நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் ரவி கலந்து கொண்டனர்.
அப்போது, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அன்பரசன் பேசுகையில், “ சென்னை முழுமை திட்டம் 3 - ன் படி அரக்கோணம், அச்சரபாக்கம் போன்ற பகுதிகள் வரை விரிவடைய உள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் புறம்போக்கு நிலங்கள் உள்ளது.அங்கு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.
மாநகர் வளர்ச்சி அடையும் போது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். போக்குவரத்து, கல்வி, சுகாதாரம், எதிர்கால தொழில் நுட்பம், தூய்மை போன்றவற்றை மேம்படுத்த வேண்டும். நீர் நிலைகளையும் வனப்பகுதிகளையும் பாதுகாக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.