திருவல்லிக்கேணி: போலீசாருக்கே வெடிகுண்டு பீதியை ஏற்படுத்திய மர்ம பரிசுப்பொருள்...! உள்ளே இருந்தது என்ன தெரியுமா..?
சென்னை, திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு வந்த மர்மமான பரிசுப்பொருளால் வெடிகுண்டு பீதி ஏற்பட்டது. இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது.
நாடு முழுவதும் டிசம்பர் 6-ந் தேதி பாபர் மசூதி தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து, நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி காவல் நிலையத்திற்கு நேற்று இரவு 7.30 மணிக்கு 52 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் வந்தார்.
அவரை விசாரித்த காவலர்களிடம், குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கலைச்செல்விக்கு பரிசுபொருள் ஒன்று வந்துள்ளதாகவும், அதை கொடுப்பதற்காக தான் வந்துள்ளதாகவும் கூறினார். அப்போது, காவல் ஆய்வாளர் கலைச்செல்வி காவல் நிலையத்தில் இல்லை. இதனால், காவல் நிலையத்தில் இருந்த சக காவலர்கள் அந்த பரிசுப்பொருளை வாங்கி வைத்தனர்.
இதையடுத்து, காவல் நிலையம் வந்த காவல் ஆய்வாளர் கலைச்செல்வியிடம் பரிசுப்பொருள் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தனக்கு யாரும் பரிசுப்பொருள் அனுப்ப வாய்ப்பில்லை என்று கூறியதால், காவல் நிலையத்தில் இருந்த அனைவரும் சந்தேகம் அடைந்தனர். உடனடியாக, திருவல்லிக்கேணி காவல் உதவி ஆணையர் பாஸ்கரிடம் தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக அந்த பரிசுபொருளை ஆய்வு செய்ய உத்தரவிட்டார். இதனால், அந்த பரிசுப்பொருளின் உள்ளே ஏதும் வெடிகுண்டு இருக்குமோ என்ற பதற்றம் ஏற்பட்டது.
உடனடியாக, காவல் நிலையத்தில் இருந்த பரிசுப்பொருளை பாதுகாப்பான முறையில் ஆய்வு செய்வதற்காக எம்.எல்.ஏ.க்கள் விடுதி வளாகத்தில் உள்ள மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கே மோப்ப நாய்களும், வெடிகுண்டு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். தீவிர பரிசோதனைக்கு பிறகு, பரிசுப்பொருள் பெட்டியில் வெடிகுண்டு உள்பட ஆபத்தான பொருட்கள் ஏதுமில்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த பரிசுபொருளைப் பிரித்துப் பார்த்தபோது காவலர்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அதில், முந்திரிப்பருப்பும், சாக்லேட்டும் இருந்தது. பெண் காவல் ஆய்வாளருக்கு முந்திரிப்பருப்பும், சாக்லேட்டையும் பரிசுப்பொருளாக கொடுத்துவிட்டுச் சென்றவர் யார் என்று காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அங்கே சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்