Chennai Traffic Diversion: சென்னையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் - இந்த சாலையில் இனி பயணிக்க முடியாது
Gandhi Mandapam Traffic DIversion: சென்னை காந்தி மண்டபம் சந்திப்பில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Gandhi Mandapam Traffic DIversion: நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில், சென்னை காந்தி மண்டபம் சந்திப்பில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
போக்குவரத்து மாற்றம்:
வேகமாக வளர்ந்து வரும் சென்னை மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசல் என்பது முக்கிய பிரச்னைகளில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக பீக் ஹவர்ஸ் எனப்படும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் காலை மற்றும் மாலை வேளைகளில், வாகனங்கள் ஊர்ந்த செல்ல வேண்டிய சூழல் நிலவுகிறது. இதனை சீர்படுத்த சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை, பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறது. மேம்பாலங்கள், சுரங்கப்பாதை, மெட்ரோ பாலம், பராமரிப்பு பணிகள் என பல்வேறு காரணங்கள் அடிப்படையில், குறிப்பிட்ட சாலைகள் வாயிலான போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. அந்த வகையில் தான், காந்தி மண்டபம் பகுதியில் ஏற்படும் நெரிசலை தவிர்க்கும் நோக்கில், நாளை முதல் அங்கு போக்குவரத்து மாற்றங்கள் அமல்படுத்தப்பட உள்ளன.
காந்தி மண்டபம் சந்திப்பில் போக்குவரத்து மாற்றம்:
நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில், காந்தி மண்டபம் பகுதியில் சோதனை முயற்சியாக நாளை முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி,
- கிண்டி ராஜ்பவனில் இருந்து மத்திய கைலாஷ் பகுதியை நோக்கி சர்தார் படேல் சாலையில் வரும் எம்டிசி பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களும் காந்தி மண்டபம் (ஐஐடி) மேம்பாலம் வழியாக மட்டுமே பயணிக்க வேண்டும்.
- காந்தி மண்டபம் சர்வீஸ் சாலையை அணுகும் வாகனங்கள் கட்டாயம் காந்தி மண்டபம் சந்திப்பு பகுதியில் இடதுபுறமாக திரும்பிச் செல்ல வேண்டும். மத்திய கைலாஷை நோக்கி நேராக செல்ல அனுமதிக்கப்படமாட்டாது
- திருத்தப்பட்ட போக்குவரத்து வசதிகளுக்கு ஏற்ப CLRI பேருந்து நிலையமானது தற்போது உள்ள இடத்திலிருந்து, அடையாறு நோக்கி சற்றே முன்னோக்கி அமைக்கபட உள்ளது
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ள இந்த முன்னெடுப்புகளுக்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிகக் வேண்டும் என சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெரிசல் மிக்க பகுதிகள்:
காந்தி மண்டபம் என்பது நகரின் பிரதான பகுதிகளில் அமைந்துள்ள பொதுமக்கள் அதிகம் செல்லும் ஒரு இடமாகும். இந்த பகுதியை சுற்றி தான் அண்ணா பல்கலைக்கழகம், பிர்லா பிளானிடோரியம், மெட்ராஸ் ஐஐடி, புற்றுநோய் சிகிச்சை மையம், கிண்டி பூங்கா போன்ற பல்வேறு முக்கிய ஸ்தலங்கள் அமைந்துள்ளன. இதுபோக இதே பகுதியில் தான், ஆளுநர் மாளிகையும் அமைந்து இருப்பதால், இந்த சாலை எப்போதும் பரபரப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சோதனை முறையில் காந்தி மண்டபம் சந்திப்பு பகுதியில் செய்யப்படும் போக்குவரத்து மாற்றங்கள், நல்ல பலன் அளித்தால் எதிர்காலத்தில் அது தொடர்ந்து பின்பற்றப்படலாம் என கூறப்படுகிறது.





















