திருவண்ணாமலையில் குழந்தையுடன் விவசாயி கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி
தனக்கு சொந்தமான பட்டா நிலத்தில் கிணறு தோண்ட விடாமல் தடுக்கும் நபர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெறுவது வழக்கம், அதேபோன்று இந்த வாரமும் மக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த குறை தீர்வு கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கைகளை மனுக்களாக எழுதி மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக அளித்தனர். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு தாலுகா கிருஷ்ணாபுரம் கிராமத்தை சேர்ந்த பன்னீர் செல்வத்தின் மகன் பார்த்தீபன் இவர் விவசாயம் செய்து வருகின்றார். இவர் இன்று அவருடைய மனைவி மூன்று குழந்தைகளுடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது விவசாயி பார்த்திபனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா கிருஷ்ணாபுரம் கிராமத்தில் வசிக்கும் விவசாயி பார்த்திபன் வயது (35) இவரது மனைவி அஞ்சலிதேவி வயது (27) இவர்களுக்கு சோனியா வயது (3), திருமாறன் வயது (1), கலைமாறன்(6 மாதம்) என மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கிருஷ்ணாபுரம் கிராமத்தில் பார்த்திபனுக்கு சொந்தமாக 4 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த விவசாய நிலத்தில் போதிய அளவில் விவசாயம் செய்ய தண்ணீர் கிடைக்க வில்லை இதனால் வருடத்திற்கு 1- முறை மட்டுமே பார்த்தீபன் விவசாயம் செய்யமுடிகிறது. இதனால் விவசாயத்தை மட்டும் நம்பி குடும்பத்தை நடத்தி வருகிறார். போதிய வருமானம் இல்லாததால் தனது விவசாய நிலத்தில் கிணறு தோண்ட முடிவெடுத்து கிணறு தோண்டுவதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பணியை துவக்கி உள்ளார்.
பின்னர் கிணறு தோண்டும் பணியை தடுத்து நிறுத்தி பக்கத்து நிலத்துக்காரர்களான குருவன், சேட்டு, அர்ஜுனன், , தவமணி உள்ளிட்ட 8-நபர்கள் பார்த்திபனை தகாத வார்த்தைகளால் பேசி அடித்து தாக்கியுள்ளனர். இதனால் ஜேசிபி இயந்திரம் கிணறு தோண்ட முடியாமல் அங்கு இருந்து ஜேசிபி சென்று விட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பார்த்திபன் உடனடியாக சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் சேத்துப்பட்டு காவல் நிலைய காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனால் மன உளைச்சல் ஏற்பட்ட பார்த்திபன் தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி சென்றனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.
தனக்கு சொந்தமான பட்டா நிலத்தில் கிணறு தோண்ட விடாமல் தடுக்கும் நபர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், தங்களால் விவசாயம் செய்ய முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கிணறு தோண்ட விடாமல் தடுக்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென விவசாயி பார்த்திபன் கோரிக்கை விடுத்தார். பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் மீட்டு திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.