" கழுத்தை அறுத்து விடுவேன் " என பெண் தூய்மை பணியாளரை மிரட்டிய நபர் !!
சென்னை எழும்பூர் பகுதியில் பெண் தூய்மை பணியாளரை தகாத வார்த்தைகளால் பேசி கையால் தாக்கிய நபர் கைது

சென்னையில் அதிர்ச்சி ; " கழுத்தை அறுத்து விடுவேன் " என பெண் தூய்மை பணியாளரை மிரட்டிய நபர்
சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த லட்சுமி ( வயது 43 ) என்பவர், பெருநகர சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலைக்கு சேர்ந்து வேப்பேரி பகுதியில் பணி செய்து வருகிறார்.
விடியற் காலையில் லட்சுமி எழும்பூர், காந்தி இர்வின் பாலம் மற்றும் ஈ.வெ.ரா சாலை சந்திப்பு அருகே நடை பாதையில் துப்புரவு பணி மேற்கொண்டிருந்த போது, அங்கு நடந்து சென்ற ஒரு நபரை ஓரமாக போக சொன்னதாகவும், அதற்கு அந்த நபர் இந்தியில் தகாத வார்த்தைகளால் பேசி , லட்சுமியை தாக்கி விட்டு, கழுத்தை அறுத்து விடுவதாக செய்கை செய்த போது, லட்சுமி சத்தம் போடவே அந்த நபர் தப்பியோடி உள்ளார்.
இந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கும் படி லட்சுமி எழும்பூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் , பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
எழும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து குற்ற சம்பவத்தில் ஈடுபட்டு தப்பிச் சென்ற ஜம்மு & காஸ்மீர் மாநிலத்தை சேர்ந்த ரவீந்தர் சிங் ( வயது 25 ) என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரவீந்தர் சிங் விசாரணைக்குப் பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
G - Pay செய்வதாக கூறி கார் ஓட்டுநரிடமிருந்து பணத்தை பறித்துச் சென்ற நபர் கைது.
சென்னை பூந்தமல்லி கரையான்சாவடி பகுதியில் வசித்து வரும் மணிகண்டன், ( வயது 47 ) என்பவர் வாடகை கார் ஓட்டி வருவதாகவும், கடந்த மாதம் 17 ம் தேி அன்று இரவு கோயம்பேடு, பகுதியிலுள்ள ஒரு டீக்கடை அருகில் காரில் அமர்ந்திருந்த போது அங்கு வந்த ஒரு நபர் தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாகவும் ரூ.500 கொடுத்தால் G Pay மூலம் பணத்தை அனுப்புவதாகவும் கூறி, கவனத்தை திசை திருப்பி, அவர் சட்டைப் பையில் வைத்திருந்த பணம் ரூ.1,500 ஐ பறித்துக் கொண்டு தப்பி ஓடிச் சென்றுள்ளார்.
இது குறித்து மணிகண்டன் CMBT காவல் நிலைய குற்றப் பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். CMBT காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை செய்து மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட சாந்தோம் பகுதியை சேர்ந்த ஜோஸ்வா (எ) நரேன்ராஜ் ( வயது 19 ) என்பவரை கைது செய்தனர்.
விசாரணையில் கைது செய்யப்பட்ட ஜோஸ்வா (எ) நரேன்ராஜ் மீது ஏற்கனவே திருட்டு உட்பட 4 குற்ற வழக்குகள் உள்ளது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட ஜோஸ்வா (எ) நரேன்ராஜ் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.





















