Thirumavalavan: “ஆட்சியில் பங்கு , அதிகாரத்தில் பங்கு” - முதல்வரை சந்தித்த திருமாவளவன் வைத்த கோரிக்கை என்ன?
ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பதை பற்றி முதலமைச்சர் ஏதும் கேட்கவில்லை. அது 1990 களில் இருந்து விடுதலை சிறுத்தை கட்சி பேசி வரும் கருத்து.
மு.க ஸ்டாலின் - திருமாவளவன் சந்திப்பு
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் தொல். திருமாவளவன் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது கட்சியின் பொதுச் செயலாளரும் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினருமான முனைவர் துரை. ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் சிந்தனை செல்வன், எஸ் எஸ் பாலாஜி, பனையூர் மு பாபு, வன்னியரசு ஆகியோர் உடன் இருந்தனர்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி ;
முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தை வெற்றிகரமாக முடித்ததை அடுத்து விசிக சார்பில் அவருக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தோம். இந்த பயணம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது
அக்டோபர் இரண்டாம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடத்த உள்ள சூழலில் மாநாட்டின் இரண்டு முக்கியமான கோரிக்கைகளை முன் வைத்து பரப்புரையை மேற்கொண்டு வருகிறோம்.
திருமாவளன் வைத்த கோரிக்கைகள்
1. தமிழ்நாட்டில் அரசு மதுபான கடைகளை விற்பனை இலக்கை படிப்படியாக குறைக்க வேண்டும்,
2. தேசிய அளவில் படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவதற்கு அனைத்து மாநில அரசுகளும் முன்வர வேண்டும்
மது ஒழிப்பு மாநாடு - திமுக பங்கேற்பு
திமுக நிறுவனத் தலைவர் பேரறிஞர் அண்ணா மதுவிலக்கில் உறுதியாக இருந்தார், அப்போதைய ஒன்றிய அரசுக்கும் அழுத்தம் கொடுத்துள்ளார். அதனை பின்பற்றி 75 ஆம் ஆண்டு பவள விழாவை கொண்டாடும் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசும் இதனை வலியுறுத்தி ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளோம்.
திமுகவின் கொள்கைதான் மதுவிலக்கு கொள்கை அதில் மாற்றுக் கருத்து இல்லை எனவே விசிகவின் மது ஒழிப்பு மாநாட்டில் திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தி தொடர்பாளர், டி கே எஸ் இளங்கோவன் ஆகியோர் பங்கேற்பார்கள் என்று உறுதியளித்துள்ளார்.
இந்த கோரிக்கையை விசிக உடன் சேர்ந்து இந்திய ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க விரும்புகிறோம் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆட்சியில் பங்கு , அதிகாரத்தில் பங்கு
ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பதை பற்றி முதலமைச்சர் ஏதும் கேட்கவில்லை. அது 1990 களில் இருந்து விடுதலை சிறுத்தை கட்சி பேசி வரும் கருத்து.
தேர்தலுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை. தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் கைம்பெண்கள் கண்ணீர் சிந்த வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை முன்னுறுத்தி தான் இந்த மாநாட்டை நடத்துகிறோம். இதை அரசியலோடு பிணைத்து திசை திருப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையில் எந்த விரிசலும் இல்லை. மது ஒழிப்பு என்பது கூட்டணிக்கான பிரச்சனை இல்லை மக்களுக்கான பிரச்சனை. இந்திய ஒன்றிய அரசு இதை கண்டும் காணாமல் இருக்கிறது. எனவே அனைவரும் சேர்ந்து பேசுவோம், அழுத்தம் கொடுப்போம்.