நகைகளை திருடி நிதி நிறுவனத்தில் அடகு வைத்து சிசிடிவி காட்சியில் சிக்கிய திருடன் !!
வில்லிவாக்கம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடிய நபர் கைது. சுமார் 4 சவரன் தங்க நகைகள் மீட்பு.

பீரோவில் இருந்த நகைகள் மாயம்
சென்னை வில்லிவாக்கம் தெற்கு மாடவீதி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் விஜய் ( வயது 27 ) என்பவர் வேளச்சேரியில் உள்ள தனியார் மாலில் வேலை செய்து வருகிறார். கடந்த 21.11.2025 அன்று காலை விஜய் குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுள்ளனர். பின்னர் விஜயின் தந்தை மதியம் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் தாழ்பாள் உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து வீட்டிற்குள் சென்று பீரோவை பார்த்த போது அதில் வைத்திருந்த சுமார் 4 ½ சவரன் எடையுள்ள தங்க நகைகள் திருடு போயிருந்தது தெரிய வந்தது. இது குறித்து விஜய் வில்லிவாக்கம் காவல் நிலைய குற்றப் பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
சி.சி.டி.வி காட்சிகள் ஆய்வு
வில்லிவாக்கம் காவல் நிலைய குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்தும் சம்பவயிடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும், நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட திருவள்ளூர் மாவட்டம் மணவாளன் நகர் பகுதியை சேர்ந்த பிரபாகரன் ( வயது 33 ) என்பவரை கைது செய்தனர்.
நிதி நிறுவனத்தில் நகைகளை அடகு வைத்த திருடன்
விசாரணையில் பிரபாகரன் திருடிய தங்க நகைகளை தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து பணம் பெற்றது தெரிய வந்தது. நிதி நிறுவனத்தில் அடகு வைத்திருந்த 4 ½ சவரன் தங்க நகைகள் மீட்கப்பட்டது. மேலும் விசாரணையில் பிரபாகரன் மீது ஏற்கனவே 4 திருட்டு வழக்குகள் உள்ளது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட பிரபாகரன் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.
ஹோட்டலில் கேஸ் கசிவால் திடீர் தீ விபத்து. உடனடியாக தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்ததால் அசம்பாவிதம் தவிர்ப்பு
சென்னை பெரம்பூர் திருவேங்கடம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ரவி ( வயது 39 ) இவர் பெரம்பூர் பாரதி சாலையில் பெரம்பூர் இட்லி கடை என்ற பெயரில் டிபன் கடை வைத்து நடத்தி வருகிறார்.மாலை வேளையில் கடைக்கு வந்த பணியாளர்கள் இரவு பரோட்டா, இட்லி போன்ற டிபன் வகைகளை தயார் செய்து கொண்டிருந்தனர்.
அப்பொழுது திடீரென கேஸ் கசிவு ஏற்பட்டு தீ பற்றி எரிந்துள்ளது. உடனே கடையில் இருந்த வேலை ஆட்கள் கடையில் இருந்து வெளியே ஓடி வந்தனர். அதற்குள் மள மளவென தீ பரவி கடையில் இருந்த பொருட்கள் எரியத் தொடங்கின
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த செம்பியம் போலீசார் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்து அவ்வழியாக போக்குவரத்தை தடை செய்தனர். சம்பவ இடத்திற்கு வியாசர்பாடி தீயணைப்பு நிலைய வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். தீ விபத்து ஏற்பட்ட இடம் மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ள பகுதி என்பதால் தீ உடனடியாக அனணக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. கேஸ் கசிவினால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. செம்பியம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





















