" அப்பா - அம்மா என்னை மன்னித்து விடுங்கள் " வந்தே பாரத் ரயிலில் பாய்ந்த காதல் ஜோடி
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், வந்தே பாரத் விரைவு ரயில் முன் பாய்ந்து தனியார் நிறுவன ஊழியர்கள் இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஆதார் அட்டைகள் ஆய்வு
லக்னோவின் ஜலால்பூர் கேட் அருகே ஆண் மற்றும் பெண் ஒருவரின் உடல்கள் தண்டவாளத்தில் சிதறிக் கிடப்பதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடல்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவர்களது உடமைகளில் இருந்த ஆதார் அட்டைகளை ஆய்வு செய்ததில், உயிரிழந்தவர்கள் சூர்யகாந்த் (வயது 40) மற்றும் தீபாலி (வயது 25) என்பது உறுதி செய்யப்பட்டது.
காதல் விவகாரம்
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சூர்யகாந்த் ஒரு தனியார் நிறுவனத்தில் களப் பணியாளராகப் பணியாற்றி வந்தார். அதே அலுவலகத்தில் தீபாலி காசாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஆறு மாதங்களாக இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. சூர்யகாந்திற்கு ஏற்கனவே திருமணமாகி, சவிதா என்ற மனைவியும், கிருஷ்ணகாந்த் என்ற மகனும் உள்ளனர்.
வந்தே பாரத் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை
கடந்த ஜனவரி 8 - ம் தேதி அலுவலகத்திற்குச் சென்ற தீபாலி வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில், நேற்று அவர்கள் வந்தே பாரத் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. சம்பவ இடத்தில் இருந்து இரண்டு தற்கொலைக் கடிதங்களை போலீசார் கைப்பற்றினர்.
தீபாலியின் கடிதத்தில் , "அம்மா, அப்பா என்னை மன்னித்து விடுங்கள். உங்களைக் காயப்படுத்துவது எனது நோக்கமல்ல. எனது மகனைக் கண்டுபிடித்து விட்டேன் (சூர்யகாந்தின் மகனைக் குறிப்பிட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது)" என்று எழுதப்பட்டிருந்தது.
சூர்யகாந்தின் கடிதத்தில் , தனது மனைவியிடம் மன்னிப்புக் கோரியிருந்த அவர், "சவிதா என்னை மன்னித்து விடு, நீதான் எனது முதல் காதல்" என்று பதிவிட்டிருந்தார். மேலும் இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையின் உயர் அதிகாரி கூறுகையில் ,
இருவரும் வந்தே பாரத் ரயில் முன் பாய்ந்து உயிரிழந்துள்ளனர். ஆதார் அட்டை மூலம் அடையாளம் காணப்பட்டு, குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.





















