Tamilisai Soundararajan | இருசக்கர வாகனத்தில் மயங்கி விழுந்த பெண்… உடனடியாக முதலுதவி அளித்த ஆளுநர் தமிழிசை..
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் விருகம்பாக்கம் வீட்டின் அருகே மயங்கிய பெண்ணிற்கு ஆம்புலன்ஸில் வைத்து முதலுதவி
இருச்சகர வாகனத்தில் சென்ற வயதான பெண் ஒருவர் திடீரென மயங்கி கீழே விழுந்தவருக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மற்றும் தெலுங்கானா ஆளுநர் ஆன முன்னாள் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் முதலுதவி அளித்து அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் விருகம்பாக்கம் வீட்டின் அருகே, இன்று (வெள்ளிக்கிழமை) காலை இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த ஒரு வயதான பெண் திடீரென மயங்கி கீழே விழுந்தார். மயங்கி விழுந்ததில் அவருக்கு உடலில் காயம் ஏற்பட்டது. தமிழிசை சவுந்தரராஜன் வீட்டின் அருகிலேயே நடந்ததால், பரபரப்பாக ஏதோ சத்தம் கேட்பதை அறிந்த ஆளுநர் தமிழிசை வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார்.
அங்கு பெண் ஒருவர் மயங்கி விழுந்து உடல்முழுவதும் காயம் ஏற்பட்டிருப்பதை கண்ட தமிழிசை சௌந்தரராஜன் உடனடியாக வந்து அந்த பெண்ணுக்கு முதலுதவி அளித்தார். பின்னர் ஆம்புலன்ஸில் வைத்து அவர் முதலுதவி அளிக்க, உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினார்.
விருகம்பாக்கத்தில் உள்ள @DrTamilisaiGuv இல்லத்தின் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண் மயங்கி கீழே விழுந்தார். இதனை அறிந்த @DrTamilisaiGuv ஆம்புலன்ஸ் வாகனத்தில் வைத்து அந்த பெண்ணிற்கு முதலுதவி சிகிச்சை அளித்தார் pic.twitter.com/hMwymyrL9D
— Mathiyazhagan Arumugam (@Mathireporter) January 14, 2022
தற்போது அவர் ஆம்புலன்ஸில் வைத்து சிகிச்சை அளிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. தக்க சமயத்தில் அந்த பெண்ணுக்கு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு அங்கு சூழ்ந்து இருந்த மக்கள் நன்றி தெரிவித்து கொண்டனர்.
தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநராக இருக்கும் தமிழிசை ஹைதராபாத்திலும் புதுச்சேரியிலும் மாறி மாறி இருந்து வருகிறார். எனவே கிடைக்கும் இடைவெளிகளில் சென்னையில் உள்ள விருகம்பாக்கம் வீட்டிற்கு வந்து செல்கிறார். இன்று பொங்கல் விழா என்பதால், பொங்கல் கொண்டாடுவதற்காக தமிழகம் வந்திருந்த தமிழிசை சவுந்தரராஜன் வீட்டு வாசலில் இது போன்ற சம்பவம் நடந்த நிலையில் அவரே சென்று சிகிச்சை அளித்துள்ளார். அந்த சம்பவத்திற்கு பிறகு தன் வீட்டிலேயே தொண்டர்கள் சூழ பொங்கல் கொண்டாடினார் தமிழிசை சவுந்தரராஜன்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தெலுங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான திருமதி தமிழிசை செளந்தரராஜன் தனது இல்லத்தில் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.@DrTamilisaiGuv pic.twitter.com/44Q4ER8rj1
— AIR News Chennai (@airnews_Chennai) January 14, 2022
பின்னர் ஆளுநர் தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியதாவது :-
"பிரதமர் மோடி நாட்டில் வாழும் 160 கோடி மக்களுக்கும் தடுப்பூசி கொடுத்து வருவதால், இந்த பொங்கலை தமிழர்கள் மகிழ்வுடன் கொண்டாடி வருகின்றனர். இன்று பூஸ்டர் தடுப்பூசி வரை இந்தியாவில் போடப்படுகிறது, குழந்தைகளுக்கும் போடப்படுகிறது. இது பிரதமர் மோடியின் சாதனை, பிரதமருக்கு நன்றி, அனைவரும் பாதுகாப்பாக பொங்கல் விழாவை கொண்டாடுவோம், தடுப்பூசி போட்டுக்கொண்டாலும், மாஸ்க் அணிந்து கொரோனா பரவலை தடுப்போம்" என்று கூறினார்.