(Source: ECI/ABP News/ABP Majha)
எதற்காக உச்சி வெயிலில் விமான சாகசம் - செல்வப்பெருந்தகை கேள்வி
உயிரிழந்த நபர்களின் குழந்தைகளின் படிப்பு செலவை தமிழக காங்கிரஸ் ஏற்கும் எனவும் உயிரிழந்த நபர்களின் குடும்பத்திற்கு தமிழக காங்கிரஸ் சார்பாக ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் செல்வப்பெருந்தகை பேட்டி
கூட்ட நெரிசலில் உயிரிழப்பு
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் ;
அதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகளிலிருந்து பல நபர்கள் இன்று காங்கிரஸில் இணைந்தார்கள். ஒன்றிய அரசின் நேற்றைய விமானப் படையின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றது. லிம்கா சாதனையில் பதிவு செய்வதற்கு அனைத்து முயற்சிகளையும் இந்திய விமானப்படை மேற்கொண்டது. 15 லட்சம் மக்கள் கூடும் அளவிற்கு சாகச நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறது. இதில் ஐந்து நபர்கள் மரணமடைந்து இருக்கிறார்கள். காங்கிரஸ் சார்பாக அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.
உச்சி வெயிலில் நடந்த நிகழ்வு
இனி வரும் காலங்களில் இது போன்ற ஒரு பொது நிகழ்ச்சியில் மரணம் ஏற்படாமல் துயரங்கள் ஏற்படாமல் தமிழ்நாடு அரசு பார்த்துக் கொள்ள வேண்டும். அது தான் எங்களது வேண்டுகோள் இது மிகப்பெரிய படிப்பினை, ஆனால் எங்களது கேள்விகள் எல்லாம் இந்திய விமானப்படை கடந்த காலங்களில் மாலை நேரங்களில் இந்த விமான சாகச நிகழ்ச்சிகளை நடத்தியது எதற்காக சென்னையில் 11 மணியிலிருந்து 1 மணி வரை உச்சி வெயிலில் இந்த நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறது.
நீர்ச்சத்து குறைபாடால் இறந்துள்ளனர்
தமிழக அரசு அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்ததாக பார்வையாளர்கள் தெரிவித்திருந்தனர். கடந்த ஒரு வாரமாக தெளிவாக அதனை தெரிவித்து வந்தார்கள். இந்த 15 லட்சம் பேர் ஒரே இடத்தில் கூடினாலும் கூடிய இடத்தில் மரணம் இல்லை அங்கிருந்து வெளியில் செல்லும் போதும் மரணம் இல்லை, ஒரு மரணம் ஏற்பட்டிருக்கிறது. அந்த ஒரு மரணமும் சில பானங்கள் சாப்பிட்டு இருக்கிறார் என தெரியவந்தது. அதை கொச்சைப்படுத்த விரும்பவில்லை அவர் இறந்து விட்டார். மீதமுள்ள நான்கு நபர்களும் இரு சக்கர வாகனத்தை எடுக்கும் செல்லும் பொழுது நீர்சத்து குறைபாடு ஏற்பட்டு உயிரிழ்ந்துள்ளனர்.
அரசியலாக்க விரும்பவில்லை
இதை யாரும் நியாயப்படுத்தி பேச முடியாது. ஒருமுறைக்கு பலமுறை ஆலோசனை செய்து எவ்வளவு பேர் அங்கு கூட முடியும் கூடுபவர்களுக்கு என்னென்ன பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். தண்ணீர், ஆம்புலன்ஸ், மருத்துவர்கள் குழு உள்ளிட்டவை செய்திருந்தாலும் இந்த இழப்பை வருகின்ற காலத்தில் தடுக்க வேண்டும். தமிழக காங்கிரஸ் இந்த மரணங்களை அரசியலாக்க விரும்பவில்லை. பாதுகாப்பு வசதிகள் சரியாக செய்திருக்கிறார்கள் என தெரிவிக்கிறார்கள். நெரிசலில் யாருக்கும் இறப்பு இல்லை போகும் வழியில் நீர்சத்து குறைபாடு ஏற்பட்டு இருக்கிறது.
மருத்துவமனையில் 100 பேர் சிகிச்சை பெற்றனர். தற்போது இரண்டு பேர் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விருகிறார்கள் என கூறினார். இந்த நிகழ்விற்கு யார் பொறுப்பேற்பது என கேள்வி எழுப்பிய போது நான் நீங்கள் மக்கள் என அனைவரும் பொறுப்பு என கூறினார்.
இறந்த நபர்களுக்கு எவ்வளவு நிவாரணத்தை மாநில அரசு கொடுக்க வேண்டும் என்ற கேள்விக்கு பத்திரிக்கையாளர்களை பார்த்து நீங்களே சொல்லுங்கள் என்று கேட்ட செல்வ பெருந்தகை ,
பத்திரிகையாளர்களின் விவாதத்திற்கு பின்னர் தமிழக காங்கிரஸ் உயிரிழந்த நபர்களின் குடும்பத்திற்கு 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் உயிரிழந்த நபர்களின் குழந்தைகைளின் படிப்பு செலவை காங்கிரஸ் அறக்கட்டளை ஏற்கும் என தெரிவித்தார். தமிழக அரசு உயிரிழந்த நபர்களின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என தெரிவித்தார்.