மூத்த பத்திரிகையாளர் குமார் தற்கொலை! - முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
சென்னையில் உயிரிழந்த மூத்த புகைப்பட கலைஞரும், பத்திரிகையாளருமான குமாரின் மறைவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள இந்தியாவின் முன்னணி செய்தி நிறுவனம் ஒன்றின் அலுவலகத் தலைமை நிர்வாகியாக பணிபுரிந்து வந்தவர் குமார். 56 வயதான இவர் மூத்த புகைப்பட பத்திரிகையாளர் ஆவார். பத்திரிகை துறையில் நீண்ட அனுபவம் கொண்டவர். இந்த நிலையில், ஊதிய பிரச்சனை, பணப்பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களால் குமார் கடந்த சில தினங்களாக கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி வந்தார்.
இந்த நிலையில், அவர் தான் பணியாற்றிய நிறுவனத்தின் அறையிலே நேற்று உயிரிழந்துள்ளார். இது சக பத்திரிகையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவரது மறைவை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது, “ பத்திரிகை துறையில் நீண்ட அனுபவம் பெற்ற யு.என்.ஐ. செய்தி நிறுவனத்தின் சென்னை அலுவலகத் தலைமை நிர்வாகியும், மூத்த புகைப்படக் கலைஞராகவும் பணியாற்றிய டி.குமார் தனது உயிரை மாய்த்துக் கொண்டார் என்ற செய்தியறித்து வேதனையடைந்தேன்.
குமாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொண்டு பத்திரிகை துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் என்னுடைய ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.”
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
உயிரிழந்த மூத்த பத்திரிகையாளர் குமாரின் மறைவு இறுதிச்சடங்கு திருவல்லிக்கேணியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்