தாம்பரம் ரயில் நிலையம்: ₹890 கோடியில் நவீனமயமாக்கல்! தென் மாவட்ட பயணிகளுக்கு இனி கொண்டாட்டம்!
Tambaram Railway Station Redevelopment: "தென்மாவட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களை கூடுதலாக இயக்கம் வகையில், தாம்பரம் ரயில் நிலையம் 890 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளது"

சென்னை தாம்பரம் ரயில் நிலையம் ₹890 கோடியில் 3 ஆண்டுகளில் நவீனமயமாகிறது. 16 தண்டவாளங்கள், 3 புதிய நடைமேடைகளுடன் விரிவாக்கப்பட்டு, எழும்பூரை விட அதிக பயணிகளைக் கையாளும் வகையில் தென் சென்னைக்கான முக்கிய ரயில் முனையமாக உருவெடுக்க உள்ளது.
தாம்பரம் ரயில் நிலையம் - Tambaram Railway Station
சென்னையின் புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய தாம்பரம் மிக முக்கிய பகுதியாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக தாம்பரம் ரயில் நிலையம் சென்னையில் மூன்றாவது ரயில் முனையமாக உருவெடுத்துள்ளது. இதனால் தாம்பரத்திலிருந்து விரைவு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் இருந்து வருகிறது. எழும்பூர் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், ஒரு சில விரைவு ரயில்கள் இப்போதும் தாம்பரத்திலிருந்து தான் இயக்கப்பட்டு வருகிறது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல்
தாம்பரம் ரயில் நிலையத்தில் தற்போது நெரிசல் மிகுந்த நேரங்களில் (Peak hours) 13,500 மேற்பட்ட பயணிகளை கையாளும் வகையில் இருக்கிறது. ஆனால் வருங்காலங்களில் தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தாம்பரம் ரயில் நிலையத்தை, நவீனப்படுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
தாம்பரம் ரயில் நிலையம் மேம்பாடு - Tambaram Railway Station Redevelopment
தாம்பரம் ரயில் நிலையத்தை நவீனமயமாக்க சுமார் ₹890 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் தற்போது இந்த மேம்பாட்டு பணிகள் முடிவடைந்த பிறகு, தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணிகள் கையாளும் எண்ணிக்கை 28,750 (Peak hours) ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பம்சங்கள் என்னென்ன ? Key Features
தாம்பரம் ரயில் நிலையத்தில் தண்டவாளிகளின் எண்ணிக்கை 12-இல் இருந்து 16-ஆக உயர்த்தப்படும். ஏற்கனவே இருக்கும் நடைமேடைகள் உடன் கூடுதலாக 3 புதிய நடைமேடைகள் அமைக்கப்பட உள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்தின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் புதிய முகப்புகள் (Facades) மற்றும் கூடுதல் நடைமேம்பாலங்கள் (Foot overbridges) கட்டப்பட உள்ளது.
தாம்பரத்தில் தற்போது கிழக்கு நுழைவாயில் வழியாக வரும் பயணிகள், மேம்பாலங்கள் அல்லது எஸ்கலேட்டர்களைப் பயன்படுத்தாமல் நேரடியாக நடைமேடையைச் சென்றடையும் வகையில் புதிய வசதி செய்யப்பட்டு வருகிறது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் இருக்கும் தற்போதைய பார்க்கிங் வசதியை விட கூடுதல் பார்க்கிங் வசதி ஏற்பாடு செய்து தரப்படும். பார்க்கிங்கில் எலக்ட்ரிக் வாகனங்கள் சார்ஜ் (E- Vechiles) செய்வதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எழும்பூர் ரயில் நிலையத்திற்கு டஃப் கொடுக்கப் போகும் தாம்பரம்
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தைப் போலவே தாம்பரமும் நவீனப்படுத்தப்படுகிறது. எழும்பூரில் இடப்பற்றாக்குறை உள்ளதால், தாம்பரத்தில் அதிக இடவசதி இருப்பதை பயன்படுத்தி, எதிர்காலத்தில் இங்கிருந்து கூடுதல் விரைவு ரயில்களை (Express trains) ரயில்கள் இயக்கப்படும். இதன்மூலம் தென் மாவட்டத்திற்கு செல்லும் பயணிகளுக்கு மிகப்பெரிய அளவில் பயனுள்ளதாக அமையும். இந்தத் திட்டம் பொது-தனியார் பங்களிப்பு (PPP) முறையில் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான டெண்டர்கள் விரைவில் விடப்பட்டு, பணிகள் மூன்று ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென் மாவட்ட பயணிகள் கவனத்திற்கு...
எதிர்காலத்தில் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பல எக்ஸ்பிரஸ் ரயில்களை தாம்பரத்திலிருந்தே தொடங்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்கு இந்த மேம்பாட்டுப் பணிகள் மிக அவசியம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் சென்னையில் தாம்பரம் மூன்றாவது ரயில் முனியமாக நவீனமாக உருவெடுக்க உள்ளது. தாம்பரம் ரயில் நிலையம் மேம்பாட்டு பணிகள் தொடங்கப்பட்டதில், இருந்து 3 ஆண்டுகளுக்குள் முழுமையாக முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.




















