சாம்சங் நிறுவனத்தின் இறுதி எச்சரிக்கை.. தொடரும் ஊழியர்களின் போராட்டம்.. பின்னணி என்ன ?
காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் சாம்சங் ஊழியர்கள் தொடர்ந்து 17வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டங்களில் ஒன்றாக உள்ளது. குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டம் இந்திய அளவில், மின்னணு சாதனங்கள் உற்பத்தி செய்வது முன்னணி மாவட்டங்களில் ஒன்றாக உள்ளது. சென்னை புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய ஸ்ரீபெரும்புதூரில் பல்வேறு முன்னணி தொழில் நிறுவனங்கள், செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
ஊழியர்கள் தொடர் போராட்டம்
அந்தவகையில் ஸ்ரீபெரும்புதூரில் உலகின் முன்னணி நிறுவனமான, சாம்சங் தொழிற்சாலை இயங்கி வருகிறது. 'சாம்சங் இந்தியா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற பெயரில் இந்த தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற மின்னணு சாதனங்கள் தயாரிக்கப்படுகின்றன. 1900-க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள்.
சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சி.ஐ.டி.யூ சங்கத்தை தொடங்கினர். சங்கத்திற்கு அனுமதி வேண்டும் , ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 17வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சாம்சங் நிறுவனத்திற்கும், தொழிலாளர்களுக்கும் இடையே 4 முறை நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. தொடர்ந்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், சாம்சங் தொழிற்சாலையில் உற்பத்தி பெரும் அளவு பாதிப்படைந்துள்ளது.
இதனிடையே இந்த போராட்டம் தொடர்பாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தலையிட்டு, விரைவான மற்றும் இணக்கமான தீர்வை ஏற்படுத்த வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார். இந்த விவகாரத்தில் தீர்வை ஏற்படுத்த, தனது அமைச்சகம் முழு ஆதரவை வழங்கும் எனவும் மன்சுக் மாண்டவியா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
தொடரும் சாம்சங் நிறுவனத்தின் எச்சரிக்கை
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாம்சங் நிறுவனம் அனுப்பிய சுற்றறிக்கையில், இந்த விவகாரத்தில் மூன்றாவது அல்லது வெளிப்புற நபர்கள் ஈடுபாட்டை நிறுவனம் ஒப்புக்கொள்ளவில்லை, வேலை நிறுத்தம் தொழில் தகராறு சட்டத்தின் விதிகளின் கீழ் பிரிவு 23 மற்றும் பிரிவு 24 இது சமரச நடவடிக்கை நிலுவையில் இருக்கும் பொழுது வேலை நிறுத்தங்களை தடை செய்கிறது, ஆகையால் தற்போது மேற்கொள்ளப்படும் வேலை நிறுத்தம் சட்டத்துக்கு விரோதமானது.நியாயமான மற்றும் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்கு நிர்வாகம் உங்களை எதிர்நோக்குகிறது, அனைத்து பேச்சு வார்த்தைகளும் சட்டத்தின் கட்டமைப்புபடியே நடக்க வேண்டும் என தொழிலாளர்களுக்கும் தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இறுதி எச்சரிக்கை
மேலும் மற்றொரு சுற்றறிக்கையில், நிர்வாகம் சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவில் தெளிவாக கூறி உள்ளது போல் அனைத்து பிரச்சினைகளும் தொழிலாளர் நலத்துறை மூலமாகவே சுமுக பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும், நடவடிக்கை நிலுவையில் இருக்கும் பொழுது விதியை மீறி வேலை நிறுத்தம் ஈடுபடக்கூடாது எது ஒழிங்கின நடவடிக்கையாகும்.
மேலும் இதுபோன்று நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்ட கடைசி மற்றும் இறுதி வாய்ப்பாக சட்டவிரோத மற்றும் நியாயமற்ற வேலை நிறுத்தத்தை நிறுத்திவிட்டு உடனடியாக அமலுக்கு வரும் வகையில் , பணியை தொடங்குமாறு நிர்வாகம் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மீண்டும் தொடர விரும்பினால் , இப்போது வரை பதிலளிக்கவில்லை என்றால், காரணம் கோரும் நோட்டீஸ் பதில் அளிக்கவும், என நிர்வாகம் சார்பில் தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது.