வாடகைக்கு விடப்படும் " அம்மா திருமண மண்டபம் " எவ்வளவு வாடகை தெரியுமா ?
நகரங்களில் கட்டப்பட்ட அம்மா திருமண மண்டபங்களை நேரடியாக வாடகைக்கு விட வீட்டுவசதி வாரியம் முடிவு செய்துள்ளது. அதற்கான வாடகை விபரங்களை அறிவித்து உள்ளது

அம்மா திருமண மண்டபம்
சென்னை மதுரையில், 51 கோடி ரூபாய் செலவில் , கடந்த ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட அம்மா திருமண மண்டபங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் முடங்கி கிடக்கின்றன. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் , சென்னை பெருநகரில் நான்கு இடங்கள் , மதுரையில் ஒரு இடம் என 5 இடங்களில் , 51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் , அம்மா திருமண மண்டபங்கள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.
பயன்பாட்டுக்கு வராமல் முடக்கம்
அதன்படி மதுரை அண்ணா நகர், சென்னையில் ஆவடி பருத்திப்பட்டு , அயப்பாக்கம் , கொரட்டூர் , வேளச்சேரி ஆகிய இடங்களில் , அம்மா திருமண மண்டபங்கள் கட்டப்பட்டன. 2018 - ல் அறிவிக்கப்பட்டு , 2020 - க்குள் அனைத்து மண்டபங்களும் கட்டி முடிக்கப்பட்டன. இவற்றை தனியார் வாயிலாக நிர்வகிக்க , வீட்டு வசதி வாரியம் முடிவு செய்தது. ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் இந்த மண்டபங்கள் இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் முடங்கி கிடக்கின்றன.
அம்மா திருமண மண்டபம் வாடகைக்கு
சென்னையில் மண்டபங்கள் கட்டுமான பணிகள் முடிந்து , திறப்பு விழாவும் 2020 - ல் நடந்தது. ஆனால் இதை நிர்வகிப்பதற்கான தனியாரை தேர்வு செய்வதில் , வாரிய அதிகாரிகள் மிகுந்த அலட்சியத்துடன் செயல்படுவதாக கூறப்பட்ட நிலையில் , சென்னை , மதுரை , நகரங்களில் கட்டப்பட்ட அம்மா திருமண மண்டபங்களை நேரடியாக வாடகைக்கு விட முடிவு செய்த வீட்டு வசதி வாரியம் , அதற்கான வாடகை விபரங்களை அறிவித்து உள்ளது.
வாடகை விபரம்
ஆவடியில் உள்ள திருமண மண்டபத்துக்கான ஒரு நாள் வாடகை 1.50 லட்சம் ரூபாய் , அரை நாள் வாடகை 75,000 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று , மதுரை அண்ணா நகர் திருமண மண்டபத்துக்கான ஒரு நாள் வாடகை 50,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
தேனி - வீரபாண்டி பிரதான சாலையில் கட்டப்பட்ட திருமண மண்டபத்துக்கு ஒரு நாள் வாடகை 70,000 ரூபாய். இந்த மண்டபங்களை வாடகைக்கு எடுக்க சம்பந்தப்பட்ட கோட்ட அலுவலகங்களை அணுகலாம் என வீட்டு வசதி வாரியம் அறிவித்து உள்ளது.





















