Crime: வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை... டெலிவரி செய்யும் நபர் கைது!
அடைந்த அப்பெண் கூச்சலிடத் தொடங்கிய நிலையில், உஷாரான டெலிவரி நபர் அந்தப் பெண்ணை தாக்கியதுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
சென்னையில், மளிகைப் பொருள்களை டெலிவரி செய்யச் சென்ற தனியார் நிறுவன ஊழியர், வீட்டில் தனியே இருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, நீலாங்கரையில் உள்ள வெட்டுவாங்கேணி கணேஷ் நகரைச் சேர்ந்தவர் ஜெயபால் (35). மளிகைப் பொருட்களை டோர் டெலிவரி செய்யும் தனியார் நிறுவன ஊழியராக இவர் பணியாற்றி வந்துள்ளார்.
அதன்படி முன்னதாக துரைப்பாக்கம் எம்சிஎன் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் மளிகைப் பொருள்கள் ஆர்டர் செய்திருந்த நிலையில், அவரது வீட்டுக்கு மளிகைப்பொருட்களை டெலிவரி செய்ய ஜெயபால் சென்றுள்ளார். இந்நிலையில், அந்த வீட்டில் இருந்த பெண் தனியாக இருந்ததைக் கண்டறிந்த ஜெயபால், திடீரென அந்தப் பெண்ணிடம் அத்துமீறி பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் பெரும் அடைந்த அப்பெண் கூச்சலிடத் தொடங்கிய நிலையில், உஷாரான ஜெயபால், அந்தப் பெண்ணை தாக்கியதுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையில் முன்னதாக இச்சம்பவம் குறித்த பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், ஜெயபாலை துரைப்பாக்கம் காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஆயுதத்தால் தாக்கியது ஆகிய பிரிவுகளின் கீழ் ஜெயபால் மீது வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முந்தைய சம்பவம்
இதேபோல் முன்னதாக விழுப்புரம் மாவட்டத்தில் கடைக்கு வரும் பெண்களை ஃபோட்டோ எடுத்து ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் பதிவிட்ட இளைஞரைக் காவல் துறையினர் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தழுதாளி கிராமத்தில் மளிகைக்கடை நடத்தி வரும் அலாவுதீன் என்பவரது மகன் முகமது ஜுபேர் (வயது 21), தனது தந்தைக்கு உதவியாக கடையில் அவ்வப்போது வேலை செய்து வந்தார். இந்நிலையில், கடைக்கு வரும் இளம் பெண்களை அவர்களுக்குத் தெரியாமல் தன் செல்போனில் புகைப்படம் எடுத்து, அதனை ஆபாசமாக சித்தரிப்பதை வாடிக்கையாகக் கொண்டு இருந்து வந்துள்ளார்.
பின்னர் அந்த ஆபாசப்படங்களில் , ஆபாசக் கவிதைகள் எழுதி சேர்த்து அவற்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்துள்ளார். இவ்வாறு 15க்கும் மேற்பட்ட பெண்களின் ஃபோட்டோக்களை ஜூபேர் பதிவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பார்த்த ஒருவர், அந்தப் பெண்ணின் கணவரிடம், உங்கள் மனைவியின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக சித்தரித்து வெளியிடுள்ளனர் எனக்கூறி, தனது செல்போனில் வந்த புகைப்படத்தை காண்பித்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண்ணின் கணவர், திண்டிவனம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், மளிகைக்கடை வைத்துள்ள அலாவுதீன் மகன் முகமது ஜுபேர், கடைக்கு வரும் பெண்களை செல்போனில் ஃபோட்டோ எடுத்து ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து முகமது ஜுபேரை கைது செய்தனர். முகமது ஜுபேர் காவலர் பணிக்காக தேர்வு எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.