Parandur Airport: நாளை காஞ்சிபுரம் வரும் அன்புமணி ராமதாஸ்... கருத்து கேட்புக் கூட்டத்தை நடத்துகிறார்..!
Chennai Parandur Airport: பரந்தூர் விமான நிலையத் திட்டத்தால் பாதிக்கப்படக்கூடிய மக்களிடம் கருத்துக் கேட்கும் கூட்டம், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், நாளை நடைபெறவுள்ளது.
சென்னைக்கு இரண்டாவது விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் அமைக்க முடிவுசெய்யப்பட்டு, அதற்குத் தேவையான நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான முதல்கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் தோராய மதிப்பீட்டில், 4,751 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையம் அமையவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, விரைவில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கவிருப்பதாகவும், நில எடுப்பால் பாதிக்கப்படும் மக்களின் மறுவாழ்வுக்கு சந்தை விலையைவிட மிகவும் கூடுதலான இழப்பீடு வழங்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இருந்தும், பரந்தூர் உள்ளிட்ட 12 கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பால், பாதிக்கப்படும் மக்களிடம் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் நாளை கருத்துக் கேட்கவுள்ளார்.
இதுகுறித்து, பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிலையம் வெளியிட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சென்னை மாநகரத்தின் இரண்டாவது விமான நிலையம் சென்னையிலிருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ள பரந்தூரில் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மொத்தம் 4,800 ஏக்கர் பரப்பளவில் இந்த விமான நிலையத்தை அமைப்பதற்காக பொதுமக்களிடமிருந்து பெருமளவில் நிலங்கள் கையகப்படுத்தப்படவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதனால், பரந்தூர் பகுதி மக்களிடம் ஒருவித அச்சமும், பதற்றமும் ஏற்பட்டிருக்கிறது. தங்களின் நிலங்களைப் பறிக்கக் கூடாது என்று வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களின் அச்சத்தை போக்கி, பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும்.
அதற்கான நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக, பரந்தூர் விமான நிலையத் திட்டத்தால் பாதிக்கப்படக்கூடிய மக்களிடம் கருத்துக் கேட்கும் கூட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி நாளை நடத்துகிறது. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள திருமண மண்டபத்தில் நாளை (25.08.2022) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு இந்தக் கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு, பரந்தூர் புதிய விமான நிலையத் திட்டத்தால் பாதிக்கப்படவுள்ள அனைத்து கிராம மக்களிடமும் கருத்துகளை கேட்டறிய உள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1998 ஆண்டு தொடங்கிய சென்னை இரண்டாம் விமானம் நிலையம் பேச்சு .. கடந்து வந்த பாதை இதுதான்..!
விமான நிலையம் எங்கு அமைய போகிறது என தகவல் வெளியாகி உள்ள நிலையில், கடந்து வந்த பாதையை கொஞ்சம் டைம் டிராவல் செய்து பார்க்கலாம்.
1998 அக்டோபர் மாதம் சென்னை இரண்டாவது விமான நிலையம் தொடர்பாக முதல் உயர்மட்ட குழு கூட்டமானது நடைபெற்றது. இதில் சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் தேவை என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
1998 அக்டோபர் மாதம் அப்பொழுதைய தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி, பிரதமர் வாஜ்பாய்க்கு, சென்னை இரண்டாவது விமான நிலையம் தொடர்பாக பணிகளை முன்மொழிவுக்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
1998 அக்டோபர் மாதம், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி துறை ஆணையம் , சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் தெற்கு பகுதில் 10 கிலோமீட்டர் தூரத்தில் இடம் ஒன்றை தேர்வு செய்தனர்.
1999 நவம்பர் மாதம் 2000 கோடி செலவில் புதிய சர்வதேச விமான நிலையத் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
2000 நவம்பர் மாதம் போரூர் அருகில் மேற்கு மீனம்பாக்கத்தில் 3000 ஏக்கரில் அமைய உள்ளதாக தகவல் வெளியானது.
2005 ஏப்ரல் மாதம் சென்னை விமான நிலையத்தில் வடக்கே, சுமார் 1457 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு இலவசமாக வழங்க முடிவு செய்யப்பட்டது .
2007 மே மாதம் அப்பொழுதைய தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி , காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே 4820 ஏக்கர் பரப்பளவில், பசுமை விமானம் நிலையம் அமைக்க முடிவு செய்தார்.
2012 மார்ச் மாதம் சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கு சுமார் 20 ஆயிரம் கோடி ஆகும் என தமிழ்நாடு அரசு திட்டம் தீட்டியது.
2022 ஜனவரி மாதம் தமிழ் நாட்டில் 4 இடங்கள் தேர்வு செய்தனர். படாளம், திருப்போரூர் , பன்ணுர் ,பரந்தூர் ஆகிய இடங்களை தேர்வு செய்தனர்.
2022 மார்ச் மாதம் அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
2022 ஆகஸ்ட் மாதம் சென்னை அருகே ஶ்ரீபெரும்புதூர் அடுத்த பரந்தூரில் 2-வது விமான நிலையம் அமைக்கப்படும் என்று ராஜ்யசபாவில் மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.