'அதிமுக ஒருங்கிணைப்பாளராக...' அழுத்திச் சொன்ன ஓபிஎஸ்! திரௌபதி வரவேற்பில் ADMK விவகாரம்!
தமிழ்நாடு வந்துள்ள திரௌபதி முர்முவை அதிமுக ஒருங்கிணைப்பாளராக வரவேற்கிறேன் என ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை வந்துள்ள திரௌபதி முர்முவுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்துள்ள ஓ பன்னீர்செல்வம், குடியரசுத் தலைவர் தேர்தலில் திரௌபதி முர்முவுக்கே தனது ஆதரவு எனத் தெரிவித்துள்ளார்.
ஈபிஎஸ் ஓபிஎஸ் ஆதரவு
தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளை நேரில் சந்தித்து ஆதரவு பெறுவதற்காக திரௌபதி முர்மு இன்று (ஜூன்.02) சென்னை வந்தார். அவருக்கு நேரில் வந்து ஆதரவு அளிக்குமாறு பாஜக சார்பில் அதிமுகவின் தலைவர்களான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியிடம் முன்னதாக கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அவர்களின் அழைப்பை ஏற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் சொகுசு ஹோட்டலில் திரௌபதி முர்முவிற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இன்று வந்த நிலையில், ஹோட்டலின் வேறு வேறு அறைகளில் இருவரும் காத்திருந்தனர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளராக...
தொடர்ந்து முன்னதாக திரௌபதி முர்முவை சந்தித்து வரவேற்ற ஓ. பன்னீர்செல்வம், அதிமுக ஒருங்கிணைப்பாளராக தான் திரௌபதி முர்முவை வரவேற்பதாகவும், கட்சியின் சட்ட விதிப்படி தற்போது வரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் தான் தான் என்றும் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னை உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் முன்னதாக நிகழ்ச்சி அரங்கில் இருந்து எடப்பாடி பழனிசாமி புறப்படும் வரையில் காத்திருந்தும், கூட்டணிக் கட்சித் தலைவர்களின் வரிசையில் நின்றும் திரௌபதி முர்முவை ஓபிஎஸ் சந்தித்தார்.
குடியரசுத் தலைவர் தேர்தல்
தற்போது இந்திய குடியரசுத்தலைவராக இருந்துவரும் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வததற்கான தேர்தல் வருகிற ஜூலை 18 ஆம் தேதி நடைபெறுகிறது.
ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் ஜார்க்கண்டின் முன்னாள் ஆளுநராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற பழங்குடித் தலைவரான திரௌபதி முர்முவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக பாஜக அறிவித்தது. இதைத்தொடர்ந்து, திரௌபதி முர்மு கடந்த ஜுன் 24ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்தார். அவரின் வேட்பு மனுவுக்கு ஆளும் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஆதரவு தெரிவித்தனர்.
ஆதரவு கோரும் முர்மு
வேட்பு மனு தாக்கல் செய்த கையோடு குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட முக்கியத் தலைவர்களிடம் தொலைபேசியில் அழைத்து ஆதரவு கோரினார்.
அந்த வகையில் இன்று சென்னையிலும், நாளை புதுச்சேரியிலும் திரௌபதி முர்மு ஆதரவு திரட்டுகிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்