ஜூலை 18-ஆ.. நவம்பர் 1-ஆ.. தமிழ்நாடு தினம் தொடர்பாக சர்ச்சை எழுவது ஏன்?
Tamil Nadu Day : மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது ஏன்? தமிழ்நாடு என பெயர் சூட்ட நடந்த போராட்டத்தின் பின்னணி? தமிழ்நாடு தினம் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து விரிவாக அலசுகிறது இந்த தொகுப்பு.
Tamilnadu Day: தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டு நாளையோடு 57 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மாநிலத்திற்கு பெயரை மாற்றுவதில் என்ன முக்கியத்துவம் இருந்துவிடப்போகிறது? அதனால் என்ன பயன் கிடைத்துவிடப்போகிறது? என்ற கேள்வி நம் மனதில் எழலாம். ஆனால், இதற்கு நாடாளுமன்றத்தில் அன்றே பதில் அளித்திருக்கிறார் திமுகவின் நிறுவன தலைவர் அண்ணா.
"எனக்கு என்ன பயன் வந்துவிடப்போகிறது? நாடாளுமன்றத்திற்கு லோக்சபா என்று பெயர் மாற்றம் செய்து நீங்கள் என்ன பயன் அடைந்தீர்கள்? கவுன்சில் ஆப் ஸ்டேட்ஸ்-க்கு ராஜ்யசபா என்ற பெயரை மாற்றியதன் மூலம் நீங்கள் அடைந்த பயன் என்ன? குடியரசு தலைவரை ராஷ்டிரபதி என பெயரை மாற்றியதன் மூலம் உங்களுக்கு என்ன பயன்? 'நீங்கள் எதை இழந்திருக்கிறீர்கள்?" என பதில் கேள்வி கேட்டு திணறடித்தார் அண்ணா.
மெட்ராஸ் மாகாணம் தமிழ்நாடான கதை: எளிதான பெயர் மாற்ற விவகாரம் தானே, அப்போது, எளிதாக பெயர் மாற்றி இருக்கலாமே என நீங்கள் கேட்கலாம். ஆனால், தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்ற பெயர் அவ்வளவு எளிதாக கிடைத்துவிடவில்லை. அதற்கு முன்புவரை, மெட்ராஸ் ஸ்டேட் என்றே அழைக்கப்பட்டு வந்தது. நீண்ட போராட்டத்திற்கு பிறகே, நம் மாநிலத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டது.
சுதந்திரத்திற்கு முன்பு வரை, மெட்ராஸ் மாகாணம் என அழைக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 1950ஆம் ஆண்டு, ஜனவரி 26ஆம் தேதி, மெட்ராஸ் ஸ்டேட் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. குடியரசாக இந்தியா உருவெடுத்தபிறகு, தங்களின் அடையாளத்தை பிரதிபலிக்கும் வகையில் மொழிவாரி மாநிலங்களாக பிரிக்க வேண்டும் என குரல் எழ தொடங்கியது.
தெலுங்கு பேசும் மக்களுக்கு என மொழிவாரி மாநிலமாக ஆந்திராவை உருவாக்க வேண்டும் என கடந்த 1952ஆம் ஆண்டு, அக்டோபர் 19ஆம் தேதி, உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கிய பொட்டி ஸ்ரீராமுலு கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு மரணம் அடைந்தார்.
மொழிவாரி மாநிலங்கள் அமைப்பதற்கு எதிரான நிலைபாட்டை கொண்டிருந்த பிரதமர் ஜவஹர்லால் நேரு, கடும் அழுத்தம் காரணமாக இறுதியாக ஒப்புக்கொண்டார். கடந்த 1952ஆம் ஆண்டு, ஆந்திர மாநிலம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியானது.
சொன்னதை செய்த அண்ணா: ஆனால், மொழிவாரி மாநிலங்களாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஆந்திராவோடு நிற்கவில்லை. அதன் தொடர்ச்சியாக, பல மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. கடந்த 1956ஆம் ஆண்டு, திருவாங்கூர், கொச்சின், மலபார், மெட்ராஸ் ஸ்டேடில் இருந்து சில பகுதிகளை உள்ளடக்கி கேரளா மாநிலமும் மைசூர் மற்றும் மெட்ராஸ் ஸ்டேடில் இருந்து சில பகுதிகளை உள்ளடக்கி கர்நாடக மாநிலமும் உருவாக்கப்பட்டது.
இப்படிப்பட்ட சூழலில்தான், மெட்ராஸ் ஸ்டேட்-க்கு தமிழ்நாடு என பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை தீவிரம் அடைந்தது. 1950களின் தொடக்கத்திலேயே பெயர் மாற்ற கோரிக்கைகள் எழ தொடங்கிவிட்டன. ஆனால், தமிழ்நாடு என பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையுடன் உண்ணாவிரதம் இருந்து, தன்னுடைய உயிரை தியாகம் செய்த காங்கிரஸ் கட்சியின் சங்கரலிங்கனாரால் தமிழ்நாடு பெயர் மாற்ற விவகாரம் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
மெட்ராஸ் ஸ்டேட் சட்டப்பேரவையில் இதற்காக பல முறை தீர்மானங்கள் கொண்டு வரப்பட்ட பிறகும், காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இல்லாத காரணத்தால் அது தோற்கடிக்கப்பட்டது. இறுதியாக, மாநில நிதியமைச்சர் சி. சுப்பிரமணியம் சமரசம் செய்து வைக்க முன்வந்தார்.
தமிழ்நாடு தினம் தொடர்பான சர்ச்சை: தமிழில் தமிழ்நாடு என்றும் ஆங்கிலத்தில் மெட்ராஸ் ஸ்டேட் என பயன்படுத்த கடந்த 1961ஆம் ஆண்டு தீர்மானிக்கப்பட்டது. ஆனால், ஆங்கிலத்திலும் தமிழ்நாடு என்றே பயன்படுத்த வேண்டும் என திமுகவினர் வலியுறுத்தி வந்தனர்.
இறுதியில், 6 ஆண்டுகளுக்கு பிறகு, அண்ணா தலைமையில் ஆட்சிக்கு வந்த திமுக, கடந்த 1967ஆம் ஆண்டு, ஜூலை 18ஆம் தேதி, அனைத்து கட்சி ஆதரவுடன் தமிழ்நாடு பெயர் மாற்ற தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றியது. கடந்த 1969ஆம் ஆண்டு, ஜனவரி 14ஆம் தேதி, தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்டதாக அரசிதழில் வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட பிறகும், சமீபத்தில் இது தொடர்பாக புதிய சர்ச்சை வெடித்தது. அனைத்து மாநிலங்களும் தங்கள் மாநிலம் உருவான தினத்தை மாநில தினமாக கொண்டாடி வருகின்றன. ஆனால், தமிழ்நாட்டை பொறுத்தவரையில், வேறு எந்த மாநிலத்திலும் இருந்து பிரிக்கப்பட்டு உருவாக்கப்படவில்லை. மெட்ராஸ் ஸ்டேட் என்ற தமிழ்நாட்டில் இருந்துதான் பிற மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. எனவே, பல ஆண்டுகளாக மாநில தினம் என ஒரு நாளை தமிழ்நாடு அரசு குறிப்பிடாமல் இருந்து வந்தது.
இச்சூழலில், மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்ட நவம்பர் 1ஆம் தேதியை மாநில தினமாக கொண்டாட முடிவு செய்து கடந்த 2019ஆம் ஆண்டு, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், கடந்த 2021ஆம் ஆண்டு, திமுக ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து, தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட தினத்தை மாநில தினமாக கொண்டாட முடிவு செய்து, மாநில தினமாக அறிவித்தது.
இதுகுறித்து விளக்கம் அளித்திருந்த திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலின், "பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ்க் கூட்டமைப்பினர், தமிழ் அறிஞர்கள் என பல தரப்பிலும் நவம்பர் 1ஆம் நாள் எல்லை போராட்டத்தினை நினைவுக்கூறும் நாளாகத்தான் அமையுமே தவிர தமிழ்நாடு நாளாக கொண்டாடுவது பொருத்தமாக இருக்காது.
மெட்ராஸ் மாகாணம் என்று இருந்ததை மாற்றி அண்ணாவால் 1968 ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் நாள் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, தமிழ்நாடு என்று பெயரிடப்பட்ட அந்த நாள்தான் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்பட வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனை ஏற்று, ஜூலை 18 ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக அறிவிக்கப்படுகிறது" என்றார்.
இதற்கு பல்வேறு அமைப்புகள், கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதற்கு எதிர்ப்பினை பதிவு செய்த பாமக நிறுவனர் ராமதாஸ், "ஒரு மாநிலம் பிறந்த நாளைத்தான் அம்மாநில நாளாக கொண்டாட முடியும். பெயர் சூட்டப்பட்ட நாளையோ, ஒரு குறிப்பிட்ட பெயரைச் சூட்டலாம் என்று கோரிக்கை வைக்கப்பட்ட நாளையோ பிறந்தநாளாக கொண்டாட முடியாது. இது பின்னாளில் தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தும். அதை தமிழ்நாடு அரசு தவிர்க்க வேண்டும்"என குறிப்பிட்டார்.