Thangam Thennarasu: ’மின்சாரம் தாக்க வாய்ப்பு’ சென்னை வாசிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பகீர்
Thangam Thennarasu: மழை நின்ற 2 மணி நேரத்தில் மின்சாரம் சூழலை ஆராய்ந்து சென்னை முழுவதும் படிப்படியாக வழங்கப்படும் என தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
Thangam Thennarasu: மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை முழுவதும் வெள்ள நீரில் தத்தளித்து வருகின்றது. கனமழையுடன் பலத்த காற்று வீசியதால் ஒட்டுமொத்த சென்னை முழுவதற்கும் பாதுகாப்பு காரணங்களுக்காக மின்சாரம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், செய்தியாளர்களுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு மின்சாரம் விநியோகம் குறித்து கூறுகையில், “ பெரும் மழையின் காரணமாக சென்னை மாநகரில் பல இடங்களில் வெள்ள நீர் தேங்கி உள்ளது. தேங்கி இருக்கும் நீர் மின்சார ப்ளாக்குகளுக்கு அருகில் உள்ளது. இதன் வாயிலாக மின்சாரம் பாய்ந்து அசம்பாவிதங்கள் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக நிறுத்தி வைத்துள்ளோம். மேலும் சூழலை நன்கு ஆராய்ந்து படிப்படியாக சென்னை முழுவதும் மின்சாரம் வழங்கப்படு வருகின்றது. பல ப்ளாக்குகளில் மழை நீர் புகுந்துள்ளது. இதனாலும் மின்சாரம் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. சென்னை மாநகரில் மரங்கள் உடைந்து விழுந்ததால் ஒரு சில இடங்களில் மின்கம்பங்கள் உடைந்துள்ளது. இதனாலும் மின்சாரம் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. நம்மிடத்தில் போதுமான அளவில் மின் கம்பங்களும், மின் கம்பிகளும் இருப்பதால் சீரமைப்பு பணிகள் முடிந்ததும் விரைவில் மின்சாரம் வழங்கப்படும். புதைவிடக் கம்பிகள் சென்னை முழுவதும் இருப்பதால் பொதுமக்கள் அத்தியாவசியத் தேவை இன்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம். அதேபோல் வீட்டில் மின்சார சாதனங்களை கையாளுகின்றபோதும் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். மழைநீர் தேங்கிய பகுதிகளில் நடக்கவேண்டாம், மக்கள் மின்சார ப்ளாக்குகள் மற்றும் மின்சார கம்பங்களுக்கு அருகில் செல்லாமல் இருப்பதும் அவசியம்” என கூறினார்.
மேலும், “ சூழலை சரி செய்ய போர்கால அடிப்படையில் மின்சார வாரிய ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர். இது மட்டும் இல்லாமல் சீரமைப்பு பணிகளுக்கு ஆட்கள் அதிகம் தேவை என்றால் அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஊழியர்களை வரவழைக்கவும் உள்ளோம்” என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக சென்னையில் மழை பரவலாக பெய்து வந்தாலும், மிக்ஜாம் புயலின் காரணமாக நேற்று மாலையில் இருந்து சென்னையில் விடாமல் கனமழை பெய்தது வருகின்றது. இந்த கனமழை சென்னை மட்டும் இல்லாமல் திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பெய்துகொண்டு உள்ளது. இந்நிலையில் இன்று காலை மிக்ஜாம் புயல் அதிதீவிர புயலாக உருமாறியது. புயலினால் அதிகப்படியாக மழைப்பொழிவு இருந்தது. காற்றின் வேகமும் வழக்கத்தை விட கூடுதலாக இருந்தது. குறிப்பாக சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ள மீனம் பாக்கத்தில் மணிக்கு 104 கிலோ மீட்டர் வேகத்தில் வீசியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இதுவரை 34 செ.மீட்டர் மழை சென்னையில் பதிவாகியுள்ளது.
சென்னையில் தேங்கியுள்ள வெள்ள நீரினை வெளியேற்றவும் அடைப்புகளை சரி செய்யவும் சென்னை மாநகராட்சி சார்பாக 540 வாகனங்கள் பயன்படுத்தப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.