தவெக தலைவர் விஜய் விமர்சனம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன பதில் என்ன?
எங்களின் கவனம் சிதையாது , சிதறாது என்று விஜய்யின் விமர்சனம் குறித்த கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்
ரூ.79 லட்சம் செலவில் புதிய பள்ளி கட்டுமானம்
சென்னை சைதாப்பேட்டை பஜார் சாலையில் 79 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய பள்ளிக் கட்டுமானப் பணிகளை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது
சைதாப்பேட்டையில் மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மக்களின் அடிப்படைத் தேவைகளான கல்வி மருத்துவம் ஆகியவற்றிற்கான புதிய கட்டமைப்புகளை தமிழக முழுவதும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. சைதாப்பேட்டையிலும் அதற்கான புதிய கட்டமைப்புகள் வந்து கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில் சைதாப்பேட்டையில் உள்ள சென்னை துவக்கப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. புதிய வகுப்பறைகள் வாகன நடத்தும் இடம் கழிவறை சத்துணவுக்கூடம் ஸ்மார்ட் கிளாஸ் ரூம் போன்ற பல்வேறு வசதிகள் 5400 சதுர அடி பரப்பில் கட்டப்பட்டுள்ளது.
திராவிட மாடல் என மக்களை ஏமாற்றுவதாக திமுக குறித்து விஜய் கடுமையாக விமர்சித்தது குறித்த கேள்விக்கு ;
திமுகவில் உள்ளவர்களும் திமுகவை பற்றி அறிந்தவர்கள். ஆனாலும் திமுகவின் தேவை ஒரு முக்கால் நூற்றாண்டாய் கடந்து தமிழ்நாட்டுக்கு எத்தகைய வகையில் பணியாற்றிக் கொண்டுள்ளது என்பதை நன்றாக உணர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். திமுகவைத் தவிர வேறு எந்த அரசியல் இயக்கமும் சைதாப்பேட்டையில் வளர்ச்சிப் பணிக்கு ஒரு சிறு துரும்பை கூட எடுத்து போட்டு இருக்க முடியாது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சைதாப்பேட்டையில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது செயல்படுத்தப்பட்ட சாலை வசதிகள், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள், குடிநீர் வசதி போன்ற பல்வேறு பணிகளை பட்டியலிட்டார். சைதாப்பேட்டையில் மட்டும் அரசு பொறுப்பேற்ற பிறகு செயல்படுத்திய திட்டங்களை பட்டியலிட்டால் நீண்ட நேரமாகும்.
எங்களின் கவனம் சிதையாது - சிதறாது
தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் திமுகவால் வளர்ச்சி பெற்று உள்ளது. அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டு மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. எனவே எங்களின் நோக்கமெல்லாம் வளர்ச்சி குறித்தும் மக்களின் அவசிய தேவைகளை நிறைவேற்றுவது பற்றியும் தான். மற்றவற்றில் எங்களின் கவனம் சிதையாது சிதறாது என்று கூறினார்.