மிக்சர் வாங்கி விட்டு வீட்டுக்கு வரும் போது தங்க செயினை பறிகொடுத்த மூதாட்டி ! எப்படி தெரியுமா ?
மிக்சர் வாங்க சென்று திரும்பி வரும் போது , வழியில் சென்ற நபரிடம் பேச்சுக் கொடுத்து தங்க சங்கிலியை பறிகொடுத்த பெண் முதியவர்

"என்ன பாட்டி தாங்கி தாங்கி நடக்கிறீர்கள் "
சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர் செல்வி (65) தனியார் மருந்தகம் ஒன்றில் வேலை செய்து பணி ஓய்வு பெற்றவர். தனது வீட்டில் இருந்து பேருந்து நிலையம் அருகே உள்ள பேக்கரி கடையில் மிக்சர் வாங்கிக் கொண்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்த பொழுது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் வந்து தெரிந்தவர்கள் போல பேச்சை தொடங்கினார். என்ன பாட்டி தாங்கி தாங்கி நடக்கிறீர்கள் என அக்கறையாக கேட்டுள்ளார். பின்பு தனக்கு திருமண நாள் வர இருக்கிறது. அதற்கு நீங்கள் கழுத்தில் அணிந்திருக்கும் தங்க செயின் மாடலில் என் மனைவிக்கு எடுத்து பரிசளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
நகையை கழற்றி கொடுங்கள் - மாடல் பார்த்து கொள்கிறேன்
நகை விலை எவ்வளவு இருக்கும் நீங்கள் வாங்கும் பொழுது என்ன விலை எத்தனை சவரன் இருக்கும் என்பது குறித்து தனது பேச்சை தொடர்ந்துள்ளார். மூன்று சவரன் இருக்கும் என கூறிய நிலையில் கழட்டி கொடுங்கள் அதன் மாடல் என்னவென்று பார்த்துக் கொள்கிறேன். அதனை வைத்து எனது மனைவிக்கும் நான் எடுத்து தர வேண்டும் என கேட்டதை நம்பிய செல்வி கழுத்தில் இருந்து செயினை கழட்டி கொடுத்துள்ளார்.
செயினை கையில் வாங்கிய அந்த நபர் இரு சக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த நிலையில் திடீரென வண்டியை ஸ்டார்ட் செய்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். பின்பு இது குறித்து செல்வி ஓட்டேரி காவல் நிலையத்தில் நடந்த சம்பவங்களை கூறி புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ஓட்டேரி போலீசார் வழக்கு பதிவு செய்து முதற்கட்டமாக சம்பவ இடத்தில் அருகே இருந்த சி.சி.டி.வி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். சம்பவத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்ய தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடிய நிலையில் ஒரு வழியாக ஏற்கனவே குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட நபர் என தெரிய வரவே வழக்குகள் நிலுவையில் உள்ள விவரங்களும் கண்டறியப்பட்டு , அந்த நபர் யார் என அடையாளம் காணப்பட்டது.
காட்டி கொடுத்த மொபைல் சிக்னல்
மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட நபரின் புகைப்படத்தை வைத்து அடையாளம் கண்டு அதன் மூலம் யார் என விசாரணை செய்த போது அவர் சென்னை எழும்பூர் பகுதியை சேர்ந்த கார்த்திக் (39) என்பது தெரிய வந்தது. பிறகு அந்த நபரின் தொலைபேசி எண்ணை ஒரு வழியாக கண்டுபிடித்த போலீசார் Tower Location மூலமாக , தலைமறைவாகி இருந்த இடங்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். ஓட்டேரி போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்த நிலையில் , டவர் லொகேஷன் உதவியோடு கார்த்திக் பதுங்கி இருந்த இடத்தை அறிந்து கைது செய்தனர்.
காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர் விசாரணையில் நகையை அடகு வைத்ததாக தெரிவித்ததை அடுத்து அடகு சீட்டை எடுத்து வர போலீசார் அழைத்து சென்று வீட்டில் சோதனை செய்ததில் 2 அடகு சீட்டை போலீசார் கைப்பற்றினர்.
சிக்கிய நகை அடகு கடை சீட்டு
ஒரு அடகு சீட்டு செல்வி நகைக்காகவும் , மற்றொரு அடகு சீட்டு குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் , கடந்த 25 ஆம் தேதி சென்னை மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த பாலன் (வயது 66) என்கிற நபர் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பொழுது நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது அவரை காப்பாற்றுவது போல அருகே சென்று தூக்கிவிட்டு அவர் கையில் அணிந்திருந்த 5 கிராம் மோதிரத்தை கழட்டி விட்டதாகவும் அதனை அடகு வைத்துள்ளதாகவும் அதற்கான ரசீது சீட்டு தான் இது என திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.
மேலும் விசாரணையில் , சம்பவத்தில் ஈடுபட்ட கார்த்திக் எழும்பூரில் தங்கியிருந்த நிலையில் சென்னை அயனாவரம் பகுதியில் தற்போது தங்கி வசித்து கொண்டு ஆக்டிங் டிரைவராக வேலை செய்து கொண்டு சந்தர்ப்பம் கிடைக்கும் சமயங்களில் வயதான முதியவர்களை குறிவைத்து அவர்களின் கவனத்தை திசை திருப்பி இது போன்று நகைகளை திருடுவது போன்ற சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபடும் நபர் என்பது தெரிய வந்தது.
கார்த்திக் மீது நொளம்பூர் உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் கவனத்தை திசை திருப்பி குற்ற செயலில் ஈடுபடும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து குற்ற செயலுக்கு பயன்படுத்திய ஒரு இருசக்கர வாகனம் மற்றும் பெண் முதியவரிடம் வாங்கி சென்ற 3 சவரன் செயின் பறிமுதல் செய்யப்பட்டது.





















