Madras Day 2022: பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சியின் மையமாக சென்னை மாறியது எப்படி?
மற்ற முக்கிய நகரங்களை காட்டிலும் சென்னையின் வளர்ச்சி தனித்துவமானது. ஏனெனில், இதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன.
நாட்டின் முக்கிய நகரமான சென்னை, பொருளாதாரத்திலும் சமூக அளவிலும் மிக பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. மற்ற முக்கிய நகரங்களை காட்டிலும் சென்னையின் வளர்ச்சி தனித்துவமானது. ஏனெனில், இதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன. மெட்ராஸ் மாகாணத்திலிருந்து சென்னையாக மாறிய நகரத்திற்கு என ஆயிரம் ஆண்டு வரலாறு இருப்பதாக கூறப்படுகிறது.
நவீன வரலாற்றை பொறுத்தவரையில், 1639இல் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ்டே, ஆண்ட்ரு ஹோகன் ஆகிய இருவரும் கிழக்கிந்திய கம்பெனியை நிறுவுவதற்காக அய்யப்பன் மற்றும் வேங்கடப்பன் ஆகியோரிடமிருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டை/தலைமைச் செயலகம் இருக்கும் இடத்தை வாங்கினர்.
வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த சென்னை, பல ஆண்டுகளாக நாட்டின் முக்கிய பொருளாதார நடவடிக்கைகளின் மையமாக விளங்குகிறது. சென்னை நகரத்தை சுற்றி சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக பொருளாதார நடவடிக்கைகள் தமிழ்நாட்டின் தலைநகரில் துரிதப்படுத்தப்பட்டன.
இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், பொருள்களை வர்த்தகம் செய்வதிலும், அதிக மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதிலும் ஈடுபட்டுள்ளன. தகவல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் சேவைகள் ஏற்றுமதியின் அளவு அதிகரித்ததன் காரணமாக, நாட்டின் இரண்டாவது பெரிய உலகளாவிய சந்தையாக சென்னை அடையாளம் காணப்பட்டுள்ளது.
சென்னை, முதலீடுகளை ஈர்க்கும் நகரமாக உள்ளது. தென்னிந்தியாவில் சுற்றுலாவின் முதன்மையான தளமாக கருதப்படுகிறது. 16 ஆம் நூற்றாண்டில் ஜவுளித் தொழிலால் செழிக்கத் தொடங்கிய சென்னை, உலகில் வேகமாக வளரும் முதல் 10 நகரங்கள் என ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தாவிற்கு அடுத்தபடியாக, ஃபார்ச்சூன் இதழில் இடம்பெற்ற 500 நிறுவனங்களை நடத்தும் பெரிய நகரமாக சென்னை மாறியுள்ளது.
சென்னையின் பொருளாதார வளர்ச்சியில் தொழில் நிறுவனங்களின் பங்கு:
சென்னையின் பொருளாதார அடித்தளமே பரந்த அளவிலான தொழில்களும் உற்பத்தி பிரிவுகளும் ஆகும். சென்னையின் பொருளாதார வளர்ச்சியில் பின்வரும் தொழில்கள் முக்கிய உந்து சக்திகளாக விளங்குகின்றன:
தகவல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் பிபிஓ
பல மென்பொருள் மேம்பாட்டுத் துறைகள் மற்றும் பிபிஓக்கள் சென்னையில் உருவாகி, நகரின் பொருளாதாரத் துறைக்கு மேலும் மேலும் வளர்ச்சியைக் கொண்டு வருகின்றன. பெங்களூருக்கு அடுத்தபடியாக நாட்டின் மென்பொருள் சேவைகளை அதிகம் ஏற்றுமதி செய்யும் பட்டியலில் சென்னை இரண்டாவது இடத்தையும், ஹைதராபாத் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
மஹிந்திரா, விப்ரோ, டிசிஎஸ், இன்ஃபோசிஸ், ஐபிஎம், ஹெச்பி போன்ற இந்தியாவின் தலைசிறந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சென்னையில் தங்களுடைய அலுவலகங்களைக் கொண்டுள்ளன.
ஆட்டோமொபைல் தொழில்
இந்தியாவின் ஆட்டோமொபைல் மையம் என்று அழைக்கப்படும் சென்னை, பல உள்நாட்டு மற்றும் சர்வதேச ஆட்டோமொபைல் நிறுவனங்களின் மையமாக உள்ளது. அசோக் லேலண்ட், BMW, Nissan, Royal Enfield, Daimler, Ford, Hindustan motors, Hyundai, Yamaha, Renault போன்ற பல உற்பத்தி ஆலைகள் சென்னையில் உள்ளன. இந்தியாவின் முக்கிய ஆட்டோமொபைல் சந்தையாக சென்னை வேகமாக வளர்ந்து வருகிறது.
மருத்துவ சேவை
மருத்துவ சேவை என்பது சென்னையின் முக்கிய பொருளாதார வளர்ச்சித் துறையாகும். இந்தியாவுக்கு மருத்துவ சேவைக்காக வருவோரில் 40 விழுக்காட்டினர் சென்னைக்கு தான் வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சென்னைக்கு மருத்துவ சேவைக்காக வருகை தருவோரின் எண்ணிக்கை ஆறு லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது என இந்திய தொழில் கூட்டமைப்பு கூறுகிறது.
சென்னையிலுள்ள அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் குரூப், குளோபல் ஹாஸ்பிடல்ஸ் அண்ட் ஹெல்த் சிட்டி, தி மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆர்த்தோபெடிக்ஸ் அண்ட் ட்ராமாட்டாலஜி (எம்ஐஓடி) போன்ற புகழ்பெற்ற மருத்துவமனைகள், எண்ணிலடங்கா நோயாளிகளுக்கு சிறந்த தரமான சுகாதாரம் மற்றும் மேம்பட்ட சுகாதார வசதிகளை வழங்குகிறது.
சுற்றுலாத் துறை
சென்னையின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய உந்துசக்திகளில் ஒன்று அதன் சுற்றுலாத் துறை ஆகும். தமிழ்நாட்டின் அழகிய தலைநகரான சென்னை, அதன் அற்புதமான தொல்பொருள் அடையாளங்கள், புகழ்பெற்ற பாரம்பரிய கட்டிடங்கள், செழுமையான கலாசார தளங்கள் மற்றும் நகரத்தை சுற்றியுள்ள கடற்கரை காரணமாக உலகம் முழுவதிலுமிருந்து எண்ணற்ற பார்வையாளர்களை ஈர்க்கிறது.