Chennai Day Traffic Change : டேக் டைவர்ஷன்… விவேக் மாதிரி ஆந்திரா போயிடாம இருக்கணுமா? இதை படிச்சிட்டு வண்டியை எடுங்க..
சென்னை தின கொண்டாட்டத்தின் சார்பில் இன்றும், நாளையும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதால் பெசன்ட் நகரில் போக்குவரத்தில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை தினம் என்று அழைக்கப்படும் சென்னையின் 383வது நாள் இன்றும் நாளையும் கொண்டாடப்பட உள்ளது. சென்னை தினம் ஆண்டு தோறும் சென்னையில் மிகச்சிறப்பான விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சென்னை தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகரில் உள்ள எலியட்ஸ் பீச்சில் சென்னை மாநகராட்சி சார்பில் வழக்கம்போல் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் முக்கியமான அடையாளங்களில் ஒன்றாகவும், தமிழ்நாட்டின் தலைநகராகவும் திகழும் சென்னையில் இந்த விழாவை மக்கள் சிறப்பாக கொண்டாடுவார்கள். இந்த சென்னை தினத்தை ஒன்று சேர்ந்து கொண்டாட மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.
போக்குவரத்தில் மாற்றங்கள்
சென்னை தின கொண்டாட்டத்தின் சார்பில் இன்றும், நாளையும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதால் பெசன்ட் நகரில் போக்குவரத்தில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இன்று மாலை 6 மணி முதல் வரும் ஆகஸ்ட் 22-ந் தேதி அதாவது நாளை மாலை 6 மணி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருப்பிவிடப்படும் சாலைகள்
இதன்படி, இன்று மாலை 6 மணி முதல் வரும் 22-ந் தேதி மாலை 6 மணி வரை பெசன்ட் நகர் 7-வது நிழற்சாலையில் இருந்து 6-வது நிழற்சாலை வரை எலியட்ஸ் கடற்கரைக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக 16-வது குறுக்குத் தெரு வழியாக 2-வது நிழற்சாலை நோக்கி திருப்பி விடப்படும். 16-வது குறுக்குத் தெருவில் இருந்து 6-வது நிழற்சாலையை நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு, 2-வது நிழற்சாலை மற்றும் 16-வது குறுக்குத் தெரு சந்திப்பில் திருப்பி விடப்படுகிறது.
தடை செய்யப்பட்ட சாலைகள்
3-வது பிரதான சாலையில் இருந்து 6-வது நிழற்சாலை நோக்கி செல்லும் வாகனங்கள் தடை செய்யப்பட்டு, 3-வது பிரதான சாலை மற்றும் 2-வது நிழற்சாலை சந்திப்பில் திருப்பி விடப்படும். 4-வது பிரதான சாலை மற்றும் 5-வது நிழற்சாலையில் இருந்து 6-வது நிழற்சாலை வழியாக எலியட்ஸ் கடற்கரைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக 4-வது பிரதான சாலை மற்றும் 5-வது நிழற்சாலை வழியாக திருப்பி விடப்படும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்