உயிரைக் காக்கும் பயணம் ; சென்னை மெட்ரோ ரயிலில் கொண்டு செல்லப்பட்ட நுரையீரல்
மீனம்பாக்கத்தில் இருந்து தேனாம்பேட்டை டி.எம்.எஸ்.,க்கு மெட்ரோ ரயிலில் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்ட நுரையீரல்

பெங்களூரில் இருந்து விமானத்தில் சென்னை எடுத்து வரப்பட்ட நுரையீரல், மீனம்பாக்கத்தில் இருந்து தேனாம்பேட்டை டி.எம்.எஸ்.,க்கு மெட்ரோ ரயிலில் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக தானம் தரப்பட்ட நுரையீரல் சென்னை மெட்ரோ ரயிலில் முதல் முறையாக எடுத்து வரப்பட்டுள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து, 'ஏர் ஆம்புலன்ஸ்' வாயிலாக நுரையீரலை எடுத்து வந்த மருத்துவ குழுவினர், விமான நிலையத்தில் இருந்து நேற்று மதியம் 2:07 மணிக்கு மீனம்பாக்கம் மெட்ரோ நிலையத்தை அடைந்தனர்.
பின் சென்னை மெட்ரோ ரயில் அலுவலர்கள் முழு ஆதரவு மற்றும் ஒருங்கிணைப்புடன், அந்தக் குழுவினர் மெட்ரோ ரயிலில் ஏறி, ஏழு நிலையங்களை கடந்து 2:28 மணிக்கு தேனாம்பேட்டை டி.எம்.எஸ்., மெட்ரோ நிலையத்தை வந்தடைந்தனர். அங்கிருந்து உடனடியாக ஆம்புலன்ஸ் வாயிலாக, கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுதும் 802 எம்.பி.பி.எஸ் இடங்கள் காலியாக உள்ளதாக இந்திய மருத்துவ கலந்தாய்வு அமைப்பு அறிவிப்பு
சென்னை மருத்துவ படிப்புகளுக்கான, அகில இந்திய கலந்தாய்வின் மூன்றாம் சுற்று முடிவில், நாடு முழுதும், 802 எம்.பி.பி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன என இந்திய மருத்துவ கலந்தாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 136 இடங்கள் நிரம்பாமல் உள்ளன. அதில் ஒன்பது இடங்கள் மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லுாரியிலும் 22 இடங்கள், மாநில அரசு மருத்துவ கல்லுாரிகளிலும் காலியாக உள்ளன.
மூன்று சுற்று கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில், 389 அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், 334 நிகர் நிலை மருத்துவப் பல்கலை இடங்கள், 38 மத்திய கல்வி நிறுவன இடங்கள் நிரம்பவில்லை. அதே போல் ஜெயின் சிறுபான்மையினர், வெளிநாடு வாழ் இந்தியர்கள், பாதுகாப்பு படையினரின் குழந்தைகள் மற்றும் கணவரை இழந்தவர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்கள் 41 காலியாக உள்ளன.
முதல் சுற்று கலந்தாய்வில் ஒதுக்கீடு பெற்றவர்கள், அந்த இடத்தில் சேராமல் இருந்தால் எந்த அபராதமும் இன்றி இரண்டாம் சுற்றில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால் மூன்றாம் சுற்றில் வாய்ப்பை நிராகரித்தால், அரசு மருத்துவ கல்லுாரி இடங்களுக்கு 10,000 நிகர்நிலை பல்கலைக்கு, 2 லட்சம் ரூபாய் அபராதமாக செலுத்த வேண்டும்.அத்துடன், கல்லுாரி கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என, இந்திய மருத்துவ கலந்தாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.





















