Cylinder Price: ஹாப்பி நியூஸ்.. சிலிண்டர் விலை அதிரடி குறைவு..! காரணம் என்ன தெரியுமா..?
இந்தாண்டின் இறுதியில் பல மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.
எதன் அடிப்படையில் எரிவாயு சிலிண்டரின் விலை நிர்ணயிக்கப்படுகிறது..?
டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெயின் விலை ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, எல்பிஜி, சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி சிலிண்டர் ஆகியவற்றின் விலைகள் ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் அரசால் நிர்ணயிக்கப்படும். ஏற்கெனவே, சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியம் குறைக்கப்பட்டது. இதையடுத்து, கர்நாடக மாநில தேர்தல் எதிரொலியாக 2வது மாதமாக வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படாமல் இருந்தது.
தேர்தல் காரணமாக சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை:
அதேசமயம், 19 கிலோ எடை கொண்ட வணிக எரிவாயு சிலிண்டர்களின் விலையை அரசு எரிவாயு நிறுவனங்களால் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தொடர்ந்து குறைக்கப்பட்டது. 19 கிலோ வர்த்தக சிலிண்டர் விலை ₹171 குறைக்கப்பட்டது. இருப்பினும் 14 கிலோ வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
இந்நிலையில், இந்த மாதமும் வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை அதிரடியாக குறைந்துள்ளது. இன்றைய (ஜூன் 1ஆம் தேதி ) நிலவரப்படி ரூ.84.50 விலை குறைந்து ரூ.1937 ஆக சிலிண்டர் விலை உள்ளது.
தாக்கத்தை ஏற்படுத்தும் ரஷியா - உக்ரைன் போர்:
கடந்த ஆண்டு ரஷியா-உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து காஸ் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டது. மேலும், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பிப்ரவரி வரை சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தது. ஆனால், எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு சிலிண்டர் விலையில் மாற்றத்தை ஏற்படுத்தாமல் ஒரேநிலையாக வைத்துக்கொண்டது.
இதனிடையே, கடந்த மார்ச் மாதத்தில் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை ₹50 உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக நாடு முழுவதும் சிலிண்டர் விலை ₹1100ஐ தாண்டியது. மேலும், வர்த்தக சிலிண்டர் விலை ₹351 அதிகரிக்கப்பட்டதால், சென்னையில் ₹2,268, சேலத்தில் ₹2221 ஆகவும், டெல்லியில் ₹2119.50, மும்பையில் ₹2071.50, கொல்கத்தாவில் ₹2221.50 என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.
காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான், சத்தீஸ்கர், பாஜக ஆளும் மத்திய பிரதேசம், பாரத் ராஷ்டிர சமிதி ஆளும் தெலங்கானா மாநிலங்களில் இந்தாண்டின் இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்த்தப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு மாநில சட்டப்பேரவை தேர்தலை தொடர்ந்து, அடுத்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.