வேலை இல்லை... சாப்பாடு இல்லை... சிலருக்கு உயிரும் இல்லை... தவிக்கும் தோல் தொழிற்சாலை பணியாளர்கள்!
தோல்தொழிற்சாலை வேலை தவிர வேறு எந்த வேலையும் அறியாத தொழிலார்கள் இந்த கொரோனா காலத்திலும் தங்கள் குடும்பத்தாருக்கு ஒரு வேலை உணவாவுவது வழங்க வேண்டும் என்ற வைராக்கியத்தோடு சுமை தூக்கும் கூலி வேலை தேடி ஆந்திரா , பெங்களூரு , சென்னை உள்ளிட்ட நகரங்களில் உள்ள காய்கறி மார்க்கெட்டுக்கு படை எடுக்க தொடக்கி உள்ளனர் . சற்று வயது மூத்தவர்கள் வறுமையின் கொடுமை காரணமாக தற்கொலை செய்துள்ளனர்.
“இருபது வருஷமா அம்பூர்ல இருக்கிற ஒரு தனியார் காலணி தயாரிக்கும் கம்பெனியில் தான் வேலை பார்த்து வந்தேன் , போன வருஷம் கொரோனா தொற்று ஆரம்பிக்கும் பொது கூட , ரெண்டு மாசம் தான் எங்க கம்பெனியை தற்காலிகமாக மூடினாங்க , அப்புறம் மாதத்துக்கு 30 நாள் செஞ்சுட்டு இருந்த வேலையை 15
நாளா கொறச்சி எங்களுக்கு கொடுத்திட்டு இருந்த 14 ஆயிரம் ருபாய் சம்பளத்தை 8 ஆயிரமா கம்மி பன்னாங்க...
இப்போ திடீருனு ஒரு மாசத்துக்கு முன்னாடி , கொரோனா பரவல் அதிகமா இருக்குது , எங்களுக்கு ஏற்றுமதி ஆர்டர் எல்லாம் நின்னுபோச்சு அப்படினு ஏதேதோ காரணம் சொல்லி கம்பெனியை நிரந்தரமா மூடிட்டாங்க “. என்று கண்ணீர் மல்க கூறுகிறார் ய ஆம்பூரை சேர்ந்த மௌலானா ஆசாத் (47 ) என்ற தோல் தொழிற்சாலை தொழிலாளி . எனது வயதுக்கு வந்த இரண்டு பெண்களை எப்படி திருமணம் செய்து கொடுக்கப் போகிறோனோ தெரியவில்லை என்று கண்ணீர் வழியும் கண்களோடு புலம்புவது மௌலானா ஆசாத் மட்டும் அல்ல , ஆம்பூர் , வாணியம்பாடி மட்டும் ராணிப்பேட்டை பகுதிகளை சேர்ந்த பல ஆயிர கணக்கான தொழிலாளர்கள் ,தோல் தொழிற்சாலை மூடல்களால் இதே நிலையை தான் சந்தித்து வருகின்றனர் பெரும்பாலாோர். அது மட்டுமே அவர்களின் வாழ்வாதாரம். தொழிற்சாலை மூடல்களால் மாதத்தின் சில நாட்கள் அரை வயிற்று சாப்பாடு உடனும் , பல நாட்களை முழு பட்டினியுடனுமே கடத்துகின்றனர் தொழிலாளர்கள் .
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த தொழிலார் நலத்துறை அலுவுலர் ஒருவரை தொடர்பு கொண்ட பொழுது “இந்தியாவில் வெளிநாட்டு ஏற்றுமதி வர்த்தகத்தில் தோல் பதனிடும் மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் , ஒரு முக்கிய அங்கமாகவே இருக்கின்றது என்று கூறலாம் . குறிப்பாக வட தமிழ் நாட்டில் வேலூர் , திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை ஒன்று இணைந்த ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் தோல் தொழிற்சாலைகள் அதிக அளவில் செயல்படுகின்றது . இதில் ஆம்பூர் , வாணியம்பாடி , ராணிப்பேட்டை , பேர்ணாம்பட்டு மேல்விஷாரம் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் 1500 கும் மேற்பட்ட தோல் பதனிடும் , காலணிகள் , தோல் ஆடைகள் , தோலினால் ஆனா ஆடம்பர பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றது .
இந்த தொழிற்சாலைகள் மூலம் நேரடியாகவும் , மறைமுகவும் சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு அடைந்து வருகின்றனர் . “என்று கூறினார்
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறையை சார்ந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில் . “ஒருங்கிணைத்த வேலூர் மாவட்டத்தில் உற்பத்தியாகும் தோல் பொருட்கள் , அதிக நாட்கள் உழைக்க கூடியதும் மற்றும் தரம் வாய்ந்ததாக இருப்பதனால் , இங்கு உற்பத்தியாகும் தோல் பொருட்கள், வெளிநாடுகளில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது . குறிப்பாக அமெரிக்கா , ஆஸ்திரேலியா , இங்கிலாந்து ,ரஷ்யா , ஸ்பெயின் ,பிரான்ஸ் , இத்தாலி , ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு பெரும் அளவு ஏற்றுமதி ஆகின்றது . இங்கு இயங்கி வரும் தோல் தொழிற்சாலைகள் மூலம் இந்திய நாட்டிற்கு ஆண்டுக்கு 45 ஆயிரம் கோடிக்கு மேல் அந்நிய செலாவணி கிடைத்து வந்தது .
எனினும் உற்பத்தி செலவு உயர்வு , போக்குவரத்து செலவீனம் அதிகரிப்பு , விதிமுறைகளை மீறி ரசாயன கழிவுகளை நீர்நிலைகளில் வெளியேற்றம் செய்வதால் மாசு கட்டுப்பாடு துறையின் நெருக்கடி , உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த 5 வருடமாக , வேலூர் மாவட்டத்தில் தோல் தொழிற்சாலைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றது .
கடந்த 2014-15ம் நிதி ஆண்டில் இந்திய மதிப்பில் 47 ஆயிரம் கோடியாக இருந்த அந்நிய செலாவணி 2015-16ல் 42 ஆயிரம் கோடியாகவும் , மேலும் இது 2016-17ல் 40 ஆயிரம் கோடியாகவும் , வீழ்ச்சி அடைந்து வருவதால் கடந்த 5 வருடங்களில் மட்டும் 15 ஆயிரம் கோடிக்கு மேலாக வருவாய் இழப்பை சந்தித்துள்ளது .
இது ஒரு புறம் இருக்க , கொரோனா நோய் பரவல் மற்றும் ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 50 க்கும் மேற்பட்ட தோல் பதனிடும் மட்டும் தோல்பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலைகள் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது . இதன் காரணமாக 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோல்தொழிற் சாலை தொழிலாளர்கள் வேலை இழப்பை சந்தித்துள்ளனர் .
உற்பத்தி பொருட்கள் விலை உயர்வு , போக்குவரத்து செலவினம் உயர்வு உள்ளிட்ட காரணங்களை விட , தோல் தொழிற்சாலை முதலாளிகள் , மாசு கட்டுப்பாடு உள்ளிட்ட நெருக்கடிகளால் வேலூர் பகுதிகளில் இயங்கி வரும் தங்களது தொழிற்சாலைகளை மூடிவிட்டு , நட்பு மாநிலமான ஆந்திராவை நோக்கி படை எடுத்து இருப்பது தான் தோல் தொழிற்சாலைகள் மூடுவதற்கான முக்கிய காரணம்” என்று தெரிவித்தார் .
மேலும் அவர் கூறுகையில் , ஆந்திரா அரசு தங்கள் மாநிலத்தின் வெளிநாட்டு ஏற்றுமதி வர்த்தகத்தை அதிகரிக்கும் நோக்கிலும் , தமிழக பகுதியில் இயங்கி வரும் தோல் தொழிற்சாலை முதலாளிகளை கவரும் வகையிலும் , புதிதாக தங்களது மாநிலத்தில் தோல் தொழிற்சாலை தொடங்க விரும்புவோருக்கு இலவசமாக இடங்களை அமைத்து தருவதாக தெரிவித்துள்ளது .
இதனை பயன்படுத்தி கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் இயங்கி வந்த சுமார் 20 க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் இங்கு தங்களது தொழிற்சாலைகளை நிரந்தரமாக மூடிவிட்டு , கடப்பா உள்ளிட்ட ஆந்திரா பகுதிகளில் தொடுங்குவதற்கு முழு வீச்சில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர் . என்று தெரிவித்தார் , பெயரை வெளியிட விரும்பாத அந்த அதிகாரி .
நாம் இது தொடர்பாக ராணிப்பேட்டையில் இயங்கி வரும் ஒரு தனியார் ஷூ தொழிற்சாலை முதலாளியை தொடர்பு கொண்ட பொழுது ," இந்தியாவின் 60 சதவீத தோல் பொருட்கள் ஏற்றுமதியை தமிழ் நாடு மாநிலம் தான் பூர்த்தி செய்து கொண்டு வந்தது . குறிப்பாக ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் தோல் பொருட்களுக்கு வெளி நாடுகளில் அதிக வரவேற்பு இருந்தது . ஆனால் தற்பொழுது வியட்நாம் உள்ளிட்ட நட்பு நாடுகள் தோல் உற்பத்தி தொழிலில் ஆர்வம் காட்டி நமக்கு பெரும் போட்டியாக மாறி உள்ளனர் .
மேலும் தற்பொழுது நிலவி வரும் உற்பத்தி செலவு உயர்வு , ஜி எஸ் டி வரி விதிப்பு , மாசு கட்டுப்பாடு வாரியத்தின் நெருக்கடி உள்ளிட்ட பிரச்சனைகளை சமாளித்து தொழிற்சாலைகளை நடத்துவது பெரும் சவாலாகவே உள்ளது .
இங்கு செயல் படும் அனைத்து தோல் தொழிற்சாலைகளும் , வாங்கி கடன் பெற்றே நடத்தப்படுகின்றது . கடந்த 2 வருடங்களாக தோல் தொழிற்சாலைகள் பெரும் நஷ்டத்தில் செயல் படுவதால் வங்கி கடன்களை திருப்பி செலுத்த முடியாத சூழ்நிலைகள் உருவாகி உள்ளது . எனவே வங்கிகள் சார்பில் , தொழிற்சாலைகளை ஜப்தி செய்யும் நடவடிக்கை நடந்து வருவதால் தொழிற் சாலைகளை மூடவேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது " என்று கூறினார் .
ABP நாடு செய்தி குழுமம் தமிழ் நாடு தொழிற்சங்க நடுவனத்தின் மாநில பொது செயலாளர் செ ரூபனிடம் கேட்ட போது, ‛‛ பல்வேறு காரணங்களை கூறி தோல் தொழிற்சாலை முதலாளிகள் , தொழிலார்களுக்கு முறையான சம்பளத்தை வழுங்குவதில்லை . இந்த நிலை ஜி எஸ் டி வரி விதிப்பு முன்பு இருந்தே நிலவி வருகின்றது . தற்பொழுது உச்சபட்ச மனசாட்சி அற்ற நடவடிக்கையாக தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையே முடக்கும் வகையில் தொழிற்சாலைகளை மூடி வருகின்றனர் . இதன் மூலம் ஆம்பூர் , வாணியம்பாடி , ராணிப்பேட்டை பகுதிகளில் 20 ஆயிரத்துக்கும் மேலான தொழிலாளர்கள் வேலை இழப்பை சந்தித்துள்ளனர் .
இவர்கள் அனைவரும் அமைப்பு சாரா தொழிலார் பட்டியலில் வராததால் அவர்கள் இழப்பீடு மற்றும் தொகுப்பு ஊதியம் உள்ளிட்ட அனைத்து உதவிகளுக்கும் தொழிற்சாலை முதலாளிகளையே நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது . இருப்பினும் முதலாளிகள் நஷ்ட கணக்கை காண்பித்து , தொழிலாளர்களுக்கு தர வேண்டிய இழப்பீட்டு தொகையை தராமல் இழுத்து அடிக்க செய்கின்றனர் . இதில் பரிதாபத்திற்குரிய விஷயம் என்ன வென்றால் , 20 வருடத்திற்கு மேலாக பணியில் இருந்த தொழிலார்களுக்கு , தனியார் தோல் தொழிற்சாலைகள் மூலம் பிடிக்கப்பட்ட வருங்கால வாய்ப்பு நிதியில் கூட பல மோசடி நடந்துள்ளது .
தோல்தொழிற்சாலை வேலை தவிர வேறு எந்த வேலையும் அறியாத தொழிலார்கள் இந்த கொரோனா காலத்திலும் தங்கள் குடும்பத்தாருக்கு ஒரு வேலை உணவாவுவது வழங்க வேண்டும் என்ற வைராக்கியத்தோடு சுமை தூக்கும் கூலி வேலை தேடி ஆந்திரா , பெங்களூரு , சென்னை உள்ளிட்ட நகரங்களில் உள்ள காய்கறி மார்க்கெட்டுக்கு படை எடுக்க தொடக்கி உள்ளனர் . சற்று வயது மூத்தவர்கள் வறுமையின் கொடுமை காரணமாக தற்கொலை முயற்சி வரை செல்கின்றனர் .
எங்களது பலகட்ட போராட்டங்களுக்கு தோல் தொழிற்சாலை முதலாளிகள் இது வரை செவி கொடுக்காததால் , அவர்களது மீது தக்க நடவடிக்கை எடுக்கவும் , பாதிக்க பட்ட தொழிலார்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணமும் மற்றும் மாற்று வேலையும் ஏற்பாடு செய்ய கோரி தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை நேரில் சந்தித்து விரிவான ஒரு மனு கொடுக்க முடிவு செய்துள்ளோம் ,’’என்று தெரிவித்தார்.