ஊரடங்கு காலத்தில், சுய உதவிக்குழு கடனாளர்களை நிர்பந்திக்கும் நிறுவனங்கள் : கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் எச்சரிக்கை..!
முழு ஊரடங்கு காலத்தில் கடன் தொகையை திரும்ப செலுத்த நிர்பந்தம் செய்யும் நிறுவனங்கள் மீது பின்வரும் 04324 - 257377 தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு காலத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் கடன் தொகையை திரும்ப செலுத்த நிர்பந்தம் செய்யும் தனியார் வங்கிகள் மற்றும் நுண்நிதிக்கடன் நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் மு வடநேரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா தொற்று 2-ம் அலை பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் முழு ஊரடங்கு கடந்த 10.05.2021 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு தற்போது நடைமுறையில் உள்ளது. சில துறை அரசு அதிகாரிகள் முதல் நாள்தோறும் பிழைப்பு நடத்தி வரும் பாட்டாளிகள் வரை, வேலைகளுக்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஒரு சிலர் காய்கறி வண்டி, பழ வண்டி , பூக்கடை ஹோட்டல் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் உள்ள கடைகளை திறந்து வைத்து தங்கள் வியாபாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். தினசரி வேலைக்கு செல்வோர் தற்போதுள்ள சூழ்நிலையில் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
இந்நிலையில், பல்வேறு மாவட்டங்களில் உள்ள தனியார் வங்கிகள் மற்றும் நுண்நிதிகடன் வழங்கும் நிறுவனங்கள் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு வழங்கிய கடன் தவணை தொகையை திரும்ப செலுத்தக்கேட்டு நிர்பந்தம் செய்துவருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
எனவே, கரூர் மாவட்டத்தில் தவணைத்தொகை செலுத்த கட்டாயப்படுத்தாமல் கால அவகாசம் அளிக்கவேண்டும். அந்த நிலுவைத் தொகைகளுக்கு கூடுதல் வட்டி வசூலிப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட அளவில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், திட்ட இயக்குநர், மகளிர் திட்டம், மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மகளிர் சுயஉதவிக் குழுக்களின் கடன் திரும்பச்செலுத்தும் கால அட்டவணையை மாற்றி அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், கொரோனா பெருந்தொற்று காரணத்தால் தனியார் வங்கிகள் மற்றும் நுண் நிதி நிறுவன பணியாளர்கள் வெளியூர் நபர்களாக இருப்பதாலும் கடன் தொகை வசூல் செய்வதற்காக அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று வருவதாலும் இவர்கள் மூலம் பொது மக்களுக்கு கொரோனா தொற்று பரவ அதிக அளவில் வாய்ப்புள்ளது.
எனவே, இது தொடர்பாக எந்த புகார்களுக்கும் இடம் அளிக்காத வகையில் செயல்பட வேண்டும். இதையும் மீறி புகார்கள் ஏதேனும் கரூர் மாவட்டத்தில் பெறப்படும் நிலையில், இச்செயல் தற்போது அரசு விதித்துள்ள ஊரடங்கு நடைமுறைகளை மீறிய செயலாக கருதி, தொடர்புடைய அனைத்து தனியார் வங்கிகள், நுண் நிதிக்கடன் நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 04324 - 257377 என்ற தொலைபேசி எண்ணில் இது தொடர்பாக புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். இந்த தகவலால் தற்போதுள்ள சூழ்நிலையில் சிரமப்பட்டுவரும் மாவட்ட மக்களுக்கு சற்று ஆறுதலாக உள்ளது.