உத்திரமேரூர் பள்ளி தண்ணீர் தொட்டியில் கலக்கப்பட்டது மனித கழிவா? நேரில் ஆய்வு செய்த கலெக்டர் விளக்கம்
உத்திரமேரூர் அரசு பள்ளியில் உள்ள தண்ணீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதாக எழுந்த தகவல்களை அடுத்து, மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட சாலவாக்கம் அடுத்த திருவந்தவாரில் , அரசுக்கு சொந்தமான ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 90-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில், இன்று கல்வி வளாகத்திற்குள் உள்ள குடிநீர் தொட்டியில், தண்ணீரை பயன்படுத்த மாணவ மாணவிகள் சென்ற பொழுது, திடீரென துர்நாற்றம் வீசி உள்ளது.
குடிநீர் தொட்டியில் மலம் கலப்பா?
பள்ளியின் தண்ணீரைத் திறந்து விட்டவுடன், மேலே சென்று தண்ணீர் தொட்டியை ஆய்வு மேற்கொண்ட பொழுது, மலம் கலந்திருப்பதாக பள்ளி ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் புகார் தெரிவித்தனர். இதனை அடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் கொடுத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு, வந்த சாலவாக்கம் போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து கல்வி அலுவலர்களும் விசாரணை மேற்கொண்டனர். மலம் கலந்ததினால், தான் இந்த இடத்தில் அதிக அளவு துர்நாற்றம் வீசியதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இந்தத் தொட்டியில் இருந்த தண்ணீரை பயன்படுத்தி மதிய உணவு தயாரிக்கப்பட்டதாக தகவல் பரவியது அடுத்து, மதிய உணவும் குழந்தைகளுக்கு கொடுக்கப்படாமல் மண்ணில், புதைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
எம்.எல்.ஏ., மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு:
மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது. இதனை அடுத்து பள்ளிக்கு சென்ற, உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், இது குறித்து மாணவ மாணவிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ஊர் மக்கள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டார். இது குறித்து சம்பவ இடத்திற்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மற்றும் காவல் கண்காணிப்பாளர் சுதாகர் ஆய்விடத்திற்கு சென்று தண்ணீர் தொட்டி மற்றும் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதனை அடுத்து பள்ளி மாணவர்கள், சத்துணவு அமைப்பவர்கள், பள்ளி பணியாளர்கள் மற்றும் மாணவ மாணவிகளிடமும் விசாரணை மேற்கொண்டனர். இதனை அடுத்து இது குறித்து விளக்கம் அளித்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி , தண்ணீர் தொட்டியில் மலம் கலக்கப்படவில்லை என விளக்கம் அளித்தார்.
பயன்படாத குடிநீர் தொட்டி:
இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது : ' இந்த நடுநிலை பள்ளி புதிதாக ஒரு தொட்டி கட்டி இருக்கிறார்கள். அது போக சின்டெக்ஸ் டேங்க்கும் இருக்கின்றது. முதலமைச்சர் காலை உணவு திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு அதற்கு என தனி தண்ணீர் தொட்டியும் கட்டப்பட்டது. புதிய கட்டிடம் கட்டிக் கொண்டிருந்த பொழுது, குற்றச்சாட்டு எழுந்துள்ள , குடிநீர் தொட்டி பயன்படாமல் சென்றுள்ளது. இதனை அடுத்து இரண்டு மூன்று முறை அந்த குடிநீர் தொட்டியை மீட்டெடுத்து இருக்கிறார்கள்.
இடித்துவிடலாம்:
கடந்த வாரம் அந்த கட்டிடப் பணிகள் முடிவடைந்து, கட்டிடம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. தற்பொழுது குற்றச்சாட்டு எழுந்து உள்ள குடிநீர் தொட்டி கைவிடப்பட்ட தொட்டி, அதை யாரும் பயன்படுத்தாமல் இருந்துள்ளனர். எப்பொழுதாவது தேவைப்பட்டால், அதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அந்த குடிநீர் தொட்டி இருந்து வந்துள்ளது. மேலே மூடி போடாமல் அந்த தொட்டி இருந்துள்ளது. அதில் வேறு எந்த பிரச்சினையும் இல்லை.
அதில் பாத்திரம் கழுவுவது, அரிசி கழுவுவது உள்ளிட்ட பணிகளை செய்து இருக்கிறார்கள். மாணவர்கள் குடிப்பதற்கு தண்ணீர் வேறு தொட்டியில் இருந்து பிடிக்கப்பட்டு வருகிறது. அந்தத் தொட்டியின் மூலமாகவே அனைத்து வகுப்பறைகளுக்கும் தண்ணீர் கொடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு பாதுகாப்பான குடிநீர் அவர்கள் வகுப்பறைக்கே சென்று விடுகிறது. அந்தத் தொட்டி தேவையில்லை அதை இடித்து விடலாம். ஒருவர் கை கழுவ சென்ற பொழுது துர்நாற்றம் வந்துள்ளது.
அழுகிய முட்டை:
அந்தத்தொட்டியில் முட்டை ஓடு உடன் கூடிய அழுகிய முட்டை கரு இருந்துள்ளது . அதனாலே துர்நாற்றம் இருந்து வந்துள்ளது. இதை தவிர வேறு எந்தவித பிரச்சனையும் கிடையாது. காகம் அந்த முட்டையை கொண்டு வந்து சேர்த்திருக்கலாம். மற்றபடி இது மிக அமைதியான ஊர். யாரும் தவறான தகவல்களை சொல்ல வேண்டாம். காக்கா ஏதாவது ஒரு பொருளை கொண்டு வந்து போடுவது நாம் பார்த்திருக்கிறோம். பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை, விசாரணை செய்ததில் எந்த பிரச்சினையும் இல்லை. தவறான தகவல்களை நம்ப வேண்டாம். நாளை அந்த குடிநீர் தொட்டி இடிக்கப்படும் என தெரிவித்தார்.