Heavy Rain Orange Alert | சாலைகளில் வெள்ளமென நீர்.. சென்னை உட்பட மூன்று மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
சென்னையில் கடந்த 4 மணி நேரமாக கொட்டித்தீர்த்த கனமழையால் நகரின் முக்கிய பகுதிகளில் தண்ணீர் முழங்கால் அளவிற்கு தேங்கியுள்ளது.
கடந்த தீபாவளிக்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது. இதையடுத்து, டிசம்பர் மாதம் முழுவதும் ஓரளவு வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில், சென்னையில் இன்று மதியம் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. திடீரென பெய்யத் தொடங்கிய இந்த மழை ஒரு அரைமணி நேரம் பெய்த பிறகு நின்றது. இதையடுத்து, மதியம் 2.30 மணியளவில் மழை பெய்யத் தொடங்கியது. சுமார் 3 மணிநேரத்தை கடந்து தற்போது வரை சென்னையில் மழை பெய்து வருகிறது.
திடீரென கொட்டித்தீர்த்த இந்த கனமழையால் சென்னையின் முக்கிய சாலைகள், நகரின் குறுகலான பகுதிகள் என அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியது. தி.நகர், வடபழனி, விருகம்பாக்கம், வளசரவாக்கம், பாரிமுனை, கோயம்பேடு, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அமைந்தகரை, அண்ணாநகர், வில்லிவாக்கம், முகப்பேர், கே.கே.நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
தொடர்ந்து கொட்டித்தீர்த்து வரும் கனமழையால் சென்னை தலைமைச் செயலக வளாகத்திற்குள் அமைந்தள்ள பல அறைகளின் உள்ளேயும் தண்ணீர் புகுந்தது. மேலும், தி.நகர், ஆயிரம் விளக்கும், தேனாம்பேட்டை, தி.நகர், வடபழனி,விருகம்பாக்கம், சூளைமேடு, அமைந்தகரை உள்ளிட்ட பல பகுதிகளில் தண்ணீர் முழங்கால் அளவிற்கு தேங்கி நிற்கிறது. இதனால், வாகன ஓட்டிகள், பணி முடிந்து வீடு திரும்புவோர் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் அதிகபட்சமாக நந்தனத்தில் 8 செ.மீ.மழையும், நுங்கம்பாக்கத்தில் 5 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
ஏற்கனவே, கடந்த தீபாவளிக்கு பிறகு தொடர்ந்து பெய்து வந்த மழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை மிக கடுமையாக பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பல இடங்களிலும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு, படகுகள் மூலம் மக்கள் மீட்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கடந்த 3.30 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து மழை பெய்து வருவது சென்னைவாசிகள் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்