Rajiv Gandhi Assassination : பேரறிவாளனுக்கு பொதுவிடுப்பு அளிக்கப்பட்டதையடுத்து, முருகன்- நளினி பொது விடுப்பு கேட்டு மனு .
நளினி , சென்னையில் உள்ள தனது தாய் பத்மா 81 வயது மூப்பு காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளார் , எனவே அவரை சந்திக்கவும் , இலங்கையில் உள்ள தனது மாமனார் ( முருகனின் தந்தை ) வெற்றிவேல் இறந்து ஒரு வருடம் நிறைவு அடைய உள்ள சூழ்நிலையில் அவருக்கு சடங்குகள் செய்யவும், தனக்கும் தனது கணவருக்கும் 30 நாட்கள் பொது விடுப்பு வழங்கிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் .
1991-ஆம் ஆண்டு மே மாதம் 21-ஆம் தேதி சென்னை அருகில் உள்ள ஸ்ரீ பெரும்புதூருக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் சாந்தன், முருகன், பேரறிவாளன் , நளினி உள்ளிட்ட 26 பேர்கள் குற்றவாளிகள் என்று கூறி இவர்கள் அனைவருக்கும் தூக்குத்தண்டனை வழங்கவேண்டும் என்ற தீர்ப்பை ஜனவரி மாதம் 1998-ஆம் ஆண்டில் வழங்கியது .
சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் என்று கருதப்பட்ட 22 நபர்களும் உச்சநீதிமன்றத்தில் மே மாதம் 1999-ஆம் வருடம் மேல்முறையீடு செய்ததில் சாந்தன், முருகன் பேரறிவாளன், நளினி ஆகிய நான்குபேருக்கு மட்டும் தூக்குத்தண்டனையை உறுதிசெய்த உச்ச நீதிமன்றம் , மீதம் இருக்கும் 22 குற்றாவாளிகளில் 19 நபர்கள் விடுதலைசெய்து, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் மற்றும் ஜெயக்குமார் ஆகிய மூன்று பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. பல்வேறுபட்ட முயற்சிகளுக்கு பின்பு நளினியின் தூக்குத்தண்டனை, அப்பொழுதைய முதல்வரான கருணாநிதியின் முயற்சியால் 2000-ஆம் ஆண்டில் ஆயுள் தண்டையாக குறைக்கப்பெற்றது. எஞ்சியிருந்த பேரறிவாளன் , சாந்தன் மற்றும் முருகன் ஆகியோரின் தூக்குத்தண்டனை 2014-ஆம் ஆண்டு ஆயுள் தண்டையாக மாற்றம் பெற்றது .
1991-ஆம் ஆண்டு முதல் 30 வருடத்திற்கு மேலாக சிறையில் இருக்கும் இந்த ஏழு பேர் தங்களை விடுதலை செய்யவேண்டும் என்ற பல கருணை மனுக்களை , ஜனாதிபதி , பிரதமர் , தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட பலருக்கு அனுப்பி இருந்தாலும், இதுவரையிலும் அவர்களின் மனுகளுக்கு ஆதரவாக எந்த ஒரு நடவடிக்கையும் தமிழக அரசோ மத்திய அரசோ எடுக்கவில்லை.
இந்த நிலையில் சென்னை புழல் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை மருத்துவ காரணங்களின் பேரில் பொதுவிடுப்பில் வெளியே விடவேண்டும் என்று அவரது தாய் அற்புதம் அம்மாள் மே மாதம் 10-ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு மனு அனுப்பியிருந்தார். அற்புதம் அம்மாள் மனுவை பரிசீலித்த முதல்வர் கடந்த 16-ஆம் தேதி, பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பொது விடுப்பு அளித்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து இன்று , வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் இருக்கும் முருகனும் , மற்றும் வேலூர் பெண்கள் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் முருகனின் மனைவி நளினி ஆகிய இருவரும் தங்களுக்கு பொதுவிடுப்பு கோரி தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் உள்துறை செயலாளருக்கும் சிறை கண்காணிப்பாளர் வாயிலாக மனு அளித்துள்ளனர் .
மனுவில் நளினி, ”சென்னையில் உள்ள தனது தாய் பத்மா 81 வயது மூப்பு காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளார். எனவே அவரை சந்திக்கவும், இலங்கையில் உள்ள தனது மாமனார் ( முருகனின் தந்தை ) வெற்றிவேல் இறந்து ஒரு வருடம் நிறைவடைய உள்ள சூழ்நிலையில் அவருக்கு சடங்குகள் செய்யவும், தனக்கும் தனது கணவருக்கும் 30 நாட்கள் பொதுவிடுப்பு வழங்கிட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்